நேற்றைய தோல்வியால் ஸ்ரேயஸ் ஐயரின் சோகமான பேட்டி!!

ஐபிஎல் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில், இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இரண்டாவது எலிமினேட்டர் போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் வெற்றிபெறும் அணி மும்பை அணியுடன் இறுதி போட்டியில் விளையாடும் என்பதால் இரண்டு அணிகளும் வெற்றி முனைப்புடன் களமிறங்கியது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியின் வீரர்கள் ஆரம்பத்தில் இருந்தே அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். அந்த அணியின் ரிஷப் பண்ட் மட்டும் நிலைத்து நின்று ஆடி அதிகபட்சமாக 38 ரன்கள் எடுத்தார். இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்தது.

இதனையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் துவக்க வீரர்களான டு பிளசிஸ், ஷேன் வாட்சன் அதிரடியாக ஆடி அணியை வெற்றிபெற செய்தனர். சென்னை அணி 19 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி அணியின் தோல்வி அந்த அணியின் வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.

நேற்றைய ஆட்டம் முடிந்த பிறகு பேசிய டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் சோகத்துடன் பேசினார். ஸ்ரேயஸ் பேசுகையில், “நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு எங்களால் ரன் குவிக்க முடியவில்லை. பவர்ப்ளேயில் முக்கியமான வீரர்கள் அணைவரும் அவுட்டாகிவிட்டனர். ஆட்டத்தை எடுத்து செல்ல நல்ல பார்டனர்ஷிப் உருவாகவில்லை.

ஆனாலும் இந்த போட்டியில் எங்கள் அணியினர் ஆடிய விதத்தை நினைத்து பெருமைப்படுகிறேன். கேப்டனாக நானும் நிறைய விசயங்களை கற்றுக்கொண்டேன். இது எங்களுக்கு சிறப்பான தொடராக அமைந்தது. இது வெறும் துவக்கம் தான். அடுத்து வரும் தொடர்களில் நிச்சயம் எங்களது முழு பலத்தை நிரூபிப்போம். இளம் வீரர்களை கொண்டு டெல்லி அணி இந்த அளவிற்கு வந்ததை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.