யாழில் 24 இளைஞர்களைப் பிடித்துச் சென்ற சிறிலங்கா இராணுவம்: படை அதிகாரிக்கு அழைப்பாணை!

யாழ்ப்பாணம் நாவற்குழியில் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனுமீதான விசாரணைகளுக்காக இராணுவ காலாட்படை பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலான முன்னிலையாகவேண்டுமென யாழ்.மேல் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த மனு விண்ணப்பங்கள் 2 வருடங்கள் இழுத்தடிப்புச் செய்யப்பட்டமையைக் கண்டித்த யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி ஆன்னலிங்கம் பிரேமசங்கர் எதிர்வரம் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் அவரை முன்னிலையாகுமாறு உத்தரவிட்டார்.

கடந்த 1996 ஆம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ அதிகாரியாகவிருந்த துமிந்த கெப்பிட்டிவலான தலைமையிலான படையினர், அப்பகுதியில் வசித்த 24 இளைஞர்களை கைது செய்த பின்னர் காணாமல் போகச் செய்யப்பட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்.மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு மனு இன்று கட்டளைக்காக நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி எஸ்.சுபாசினியின் ஏற்பாட்டில் சட்டத்தரணி கலாநிதி குமாரவேல் குருபரன் முன்னிலையானார்.

முதலாம் பிரதிவாதியான இராணுவ அதிகாரி துமிந்த கெப்பிட்டிவலான மற்றும் மூன்றாம் பிரதிவாதி சட்ட மா அதிபர் ஆகியோர் சார்பில் பிரதி மன்றாடியார் அதிபதி சேய்த்திய குணசேகர முன்னிலையானார். அவருடன் அரச சட்டவாதி மாதினி விக்கினேஸ்வரனும் முன்னிலையானார்.

இந்த வழக்கில் எதிர் மனுதார்களால் குறித்த மனு காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்ற வாதம் முன்வைக்கப்பட்டிருந்தது. இவ்வாதம் தொடர்பில் தமது வாதத்தினை முன்வைத்த சட்டத்தரணி குமாரவேல் குருபரன் ஆள்கொணர்வு மனுவில் காலதாமதம் என்பதை மன்று ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றார்.

மேலும் கடந்த காலங்களில் இது போன்ற ஆள்கொணர்வு மனு மீது எழுந்த காலதாமத வியாக்கியானங்கள் தள்ளுபடி செய்யபட்டு நீதிமன்றங்கள் கட்டளையாக்கியுள்ளன என்பதை பதிவு செய்து கொண்டார்.

இவை தொடர்பில் ஆராய்ந்த பின்னர் கட்டளையக்கப்பட்ட போது, காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைக் கண்டு பிடித்துத்தருமாறு மனுக்கள் செய்தவிடத்து எதிர் மனுதாரர்கள் பொறுப்புடன் செயற்பட்டு, உள்ளவற்றை உள்ளபடி உரைத்து இந்த மனுக்களை எதிர்கொள்ளவேண்டுமே தவிர, தேவையற்ற சட்ட ஓட்டைகளை முன்வைத்து, விடயங்களைப் பெரிப்பித்து, காலத்தை இழுத்தடித்து, மேலும் சோதனைகளை ஏற்படுத்துவதனை யதார்த்தமான வழி ஒன்றாக இந்த மன்றினால் கருதமுடியாதுள்ளமை குறிப்பிடப்படுகின்றது.

இந்த வழியே மனுதாரர்களினால் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் பூர்வாங்க ஆட்சேபனை என்ற வகையில் ஏறக்குறைய 2 வருடங்கள் செலவளிக்கப்பட்டமை பெருத்தளவில் கண்டிக்கப்படுகின்றது.

இந்த அளவில் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் தொடர்பில், உள் நிகழ்வுகளை முழுமையாக பரிசீலித்து, மனுதாரர்களுக்கு விரைவில் நிவாரணம் ஒன்றை வழங்குவதற்கு தரப்பினர்கள் அனைவரும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்த மன்று வெளிப்படுத்துகின்றது  என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கள் கட்டளையை பிறப்பித்தார்.