தென்னாபிரிக்க அணி அறிவிப்பு!

சமீப காலங்களாக ஒருநாள் சர்வதேச போட்டிகளில் சரியான போர்மில் இல்லாத தென்னாபிரிக்க நட்சத்திர வீரர் ஹஷிம் ஆம்லா, இந்த முறை உலகக்கோப்பையில் தேர்வு செய்யப்படுவாரா என்று ஐயம் இருந்த நிலையில் தென்னாபிரிக்க நேற்று அறிவித்த உலகக்கோப்பை அணியில் ஆம்லா இடம்பெற்றுள்ளார்.

இவருக்குப் பதிலாக அணியில் தேர்வு செய்யப்படலாம் என்று கருதப்பட்ட ரீஸா ஹென்றிக்ஸ் இல்லை. ரீஸா ஹென்றிக்ஸ் அறிமுகப் போட்டியிலேயே சதம் கண்டவர். ஆனால் அதன் பிறகு போர்ம் அவுட் ஆகி 18 ஒருநாள் போட்டிகளில் 26 ரன்கள்தான் சராசரி வைத்துள்ளார்.அதே போல் சகலதுறை வீரர் கிறிஸ் மோரிஸ் இல்லை.

அணிக்கு வழக்கம் போல் பொப் டு பிளெசிஸ் கப்டனாக நீடிக்கிறார். அணியில் ஒரேயொரு சிறப்பு விக்கெட் கீப்பர் மட்டுமே உள்ளார். டேவிட் மில்லர் பதிலி விக்கெட் கீப்பர் பொறுப்புடன் துடுப்பாட்டத்திற்காக அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

குவிண்டன் டி கொக், எய்டன் மார்க்ரம், ஆம்லா ஆகிய தொடக்க வீரர்கள் உள்ளனர். இவர்களில் எந்த சேர்க்கை தொடக்கத்தில் இறங்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சிஎஸ்கே வுக்கு ஆடிவரும் இம்ரான் தாஹிர் இந்த அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே போல் ரிஸ்ட் ஸ்பின்னர் காலம் என்பதால் தப்ரைஸ் ஷம்ஸி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே போல் பயனுள்ள பந்துவீச்சாளர் மற்றும் அதிரடி ஆட்டக்காரர் ஜெ.பி.டுமினி அணியில் இடம்பெற்றுள்ளார்.

டேல் ஸ்டெய்ன் காயத்திலிருந்து மீண்டு வந்து சிறப்பாக வீசி வருவதால் அவர் அணியில் இடம்பெற்றுள்ளார். 2015 உலகக்கோப்பை அரையிறுதியில் நியூஸிலாந்து அணியை கடைசி ஓவரில் கட்டிப்போடத் தவறினார் டேல்ஸ்டெய்ன். இம்முறை அவர் அந்த நினைவுடன் எச்சரிக்கையாக வீசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேகப்பந்து வீச்சில் ரபாடா, லுங்கி இங்கிடி, டேல் ஸ்டெய்ன், பெலுக்வயோ, ஆன்ரிச் நோர்ட்டியே, பிரிடோரியஸ் உள்ளனர். இதன் மூலம் நோர்ட்டியே என்ற மணிக்கு 150 கிமீ வீசும் வேகப்பந்து வீச்சாளருடன் வலுவான வேகப்பந்து கூட்டணி உள்ளது.

ஸ்பின்னில் அனுபவ 40 வயது வீரர் இம்ரான் தாஹிர், ரிஸ்ட் ஸ்பின்னர் தப்ரைஸ் ஷம்சி உள்ளனர். வலுவான அணிதான். ஆனால் கிறிஸ் மோரிஸ் விடப்பட்டது துரதிர்ஷ்டமே.

தென்னாபிரிக்க அணி வருமாறு:

பொப் டு பிளேசிஸ் (கப்டன்), ஜேபி. டுமினி, டேவிட் மில்லர், டேல் ஸ்டெய்ன், ஆண்டில் பெலுக்வயோ, இம்ரான் தாஹிர், கேகிசோ ரபாடா, டிவைன் பிரிடோரியஸ், குவிண்டன் டி கொக், ஆன்ரிச் நோர்ட்யே, லுங்கி இங்கிடி, எய்டன் மார்க்ரம், ராஸி வான் டெர் ட்யுஸன், ஹஷிம் ஆம்லா, தப்ரைஸ் ஷம்ஸி.