கடல் நடுவில் வீடு கட்டிய தம்பதி மரண தண்டனையை எதிர்நோக்கும் அபாயம்!

தாய்லாந்தில் கடலில் வீடு கட்டிய தம்பதி, மரண தண்டனையை எதிர்நோக்கும் ஆபத்தில் சிக்கியுள்ளனர்.

தாய்லாந்தின் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை நகரம் புக்கெட். இங்கு நேற்று முன்தினம் கடற்படை வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கரையில் இருந்து 12 மைல் தொலைவில் கடலில் மிதக்கும் கொங்கிரீட் தொட்டி இருப்பதை கண்டனர்.

உடனடியாக அங்கு விரைந்து, சோதனை செய்தனர். ஆனால் அதில் ஆட்கள் யாரும் இல்லை. இது குறித்து விசாரித்தபோது அமெரிக்காவை சேர்ந்த பிட்கொயின் முதலீட்டாளரான சாத் எல்வர்டோஸ்கி மற்றும் தாய்லாந்தை சேர்ந்த அவரது காதலியான சுப்ரானி தெப்ட் ஆகியோர் கடலில் இந்த வீட்டை கட்டி வாழ்ந்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, இது தாய்லாந்தின் இறையாண்மையை அவமதிக்கும் செயல் என கூறி அவர்கள் இருவர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. அதன்பேரில் பொலிசார் அவர்கள் இருவரையும் தேடி வருகின்றனர். அவர்கள் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள சாத் எல்வர்டோஸ்கி தாங்கள் கட்டி இருக்கும் வீடு, கரையில் இருந்து 13 மைல் தொலைவில் இருப்பதாகவும், இது தாய்லாந்தின் நீர் பரப்புக்கு அப்பால் உள்ளது எனவும் கூறுகிறார்.