கூட்டமைப்பின் முடிவால் பரபரப்படையும் கொழும்பு அரசியல்!

அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதா என்பது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் 26ம் திகதி முடிவெடுக்க உள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்துக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கிய போதிலும், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதில் தோல்வியடைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், எதிர்வரும் 26ம் திகதி தொடக்கம் 28ம் திகதி வரை இலங்கை தமிழ் அரசு கட்சியின் மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இதன் போது அரசாங்கத்துக்கு வழங்கி வரும் ஆதரவு குறித்து முடிவு செய்யப்படவுள்ளது.

அரசாங்கத்துடனான எதிர்கால நிலைப்பாடுகள் குறித்த தமது கட்சியின் நிரந்தரமான முடிவு இந்த மாநாட்டில் எடுக்கப்படும் என்று, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தமிழ் மக்களை ஏமாற்றி விட்டனர்.

எவ்வாறாயினும், தமிழ் மக்களை இன்னுமொரு ஆயுதப் போராட்டத்துக்குள் தள்ளுவதே அரசாங்கத்தின் நோக்கம்.” என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்த முடிவால் கொழும்பு அரசியல் பரபரப்படைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.