திண்டுக்கல்லில் மாற்று அறுவை சிகிச்சையில் 2 கைகள் பொருத்தப்பட்ட வாலிபருக்கு திருமணம்…!!

மாற்று அறுவை சிகிச்சையில் 2 கைகள் பொருத்தப்பட்ட வாலிபர் தனது காதலியை திருமணம் செய்து கொண்டார்.

திண்டுக்கல்லை சேர்ந்தவர் நாராயணசாமி. இவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் வார்டு மானேஜராக ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த 2015-ம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் சிக்கி இரண்டு கைகளையும் இழந்தார். இதனால் அவர் அன்றாட வேலைக்கு கூட மிகவும் சிரமப்பட்டார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் கைகள் மாற்று அறுவை சிகிச்சைக்காக நாராயணசாமி சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ந்தேதி நாராயணசாமிக்கு வேறு ஓருவரின் இரண்டு கைகளை பொருத்தும் ஆபரே‌ஷன் நடந்தது. டாக்டர் ரமாதேவி தைலைமையிலான குழுவினர் 13 மணி நேரம் ஆபரே‌ஷன் செய்தனர்.

இதில் அவருக்கு வெற்றிகரமாக இரண்டு கைகளும் பொருத்தப்பட்டன. பின்னர் சில நாட்கள் சிகிச்சைக்கு பிறகு நாராயணசாமி குணம் அடைந்தார். தற்போது அவர் அன்றாட பணிகளை சிரமமின்றி செய்து வருகிறார்.

இந்த நிலையில் நாராயணசாமி தனது காதலி நதியாவை திருமணம் செய்து கொண்டார்.

இதுபற்றி நாராயணசாமி கூறும் போது, நதியாவும் நானும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். நான் விபத்தில் சிக்கி இரு கைகளையும் இழந்ததால் அவரது பெற்றோர் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் நதியா பிடிவாதமாக இருந்தார். இறுதியில் அவரது பெற்றோரை சமாதானம் செய்தோம் என்றார். பொதுமக்கள் தங்களது கைகளை தானம் செய்ய முன்வரவேண்டும் என்று உறவினர்கள் நண்பர்களிடம் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்யும்படி வலியுறுத்தி வருகிறேன்.

ஒருவர் இறந்த பிறகு உடல் உறுப்புகள் வீணாக போவதற்கு பதிலாக அவைகள் தானம் செய்யப்பட்டால் மற்றவர்களுக்கு புதிய வாழ்வு கொடுக்கும் என்றார்.

நதியா கூறும் போது, நாராயணசாமி விபத்தில் சிக்குவதற்கு 2 மாதங்களுக்கு முன்பு எனது பெற்றோர் எங்கள் திருமணத்துக்கு சம்மதித்தனர். அவருக்கு ஏற்பட்ட விபத்துக்கு பிறகு பெற்றோரை சமாதானப்படுத்துவது கடினமாக இருந்தது.

ஆனால் நாங்கள் உறுதியாக இருந்து திருமணம் செய்தோம் என்றார். தமிழ்நாட்டில் இரண்டு கைகள் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட முதல் நபர் நாராயணசாமி ஆவார்.

கைகளை தானம் செய்ய பலர் முன்வருவதில்லை. இறந்த பிறகு உடலில் இருந்து கைகளை வெட்டி எடுத்துவிட்டால் அடுத்த பிறவியில் கைகள் இல்லாமல் பிறப்பார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

இதுகுறித்து டாக்டர் ரமாதேவி கூறும் போது கைகளை தானம் செய்வது குறித்து நாம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.