முதல் வெற்றியை போராடி வென்ற பெங்களூரு அணி!

ஐபிஎல் போட்டியின் 12 வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 27வது லீக் போட்டி மொகாலியில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பெங்களூரு அணியும், பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து பஞ்சாப் அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய லோகேஷ் ராகுல் மற்றும் கிறிஸ் கெயில் ஆரம்பத்திலேயே அதிரடியாக ஆடினர். துவக்க வீரராக களமிறங்கிய கிறிஸ் கெயில் அதிரடியாக ஆடி 10 பவுண்டரிகளும்,8 சிக்சரும் அடித்து 64 பந்துகளை சந்தித்து 99 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை எடுத்தது.

இதனையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய பார்த்திவ் படேல், விராட் கோலி இருவரும் ஆரம்பத்திலேயே அதிரடியாக ஆடினர். சிறப்பாக ஆடிய பார்த்திவ் படேல் 9 பந்துகளில் 19 ரன்கள் அடித்து அஸ்வின் ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதனையடுத்து களமிறங்கிய டிவில்லியர்ஸ் பந்துகளை நாலாபக்கமும் பறக்கவிட்டார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த விராட் கோலி 53 பந்துகளில் 67 ரன்கள் அடித்து ஷமி ஓவரில் முருகன் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்ததாக இறங்கிய ஸ்டோனிஸ் 16 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

அதிரடியாக ஆடிய டிவில்லியர்ஸ் 5 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் பறக்கவிட்டு 38 பந்துகளில் 59 ரன்கள் எடுத்திருந்தார். இந்தநிலையில் பெங்களூரு அணி 192 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிபெற்றது. இந்த வெற்றியானது 2019ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் முதல் வெற்றி ஆகும். அதிரடியாக ஆடிய டிவில்லியர்ஸ் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார்.