‘கேப்டன் கூல்’ தகுதியை இழந்தாரா தோனி?

ராஜஸ்தான் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் தோனி விதிமுறைகளை மீறி மைதானத்திற்குள் நுழைந்து நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளமை அவரது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ப்பூரில் நேற்றிரவு இடம்பெற்ற ஐ.பி.எல். தொடரின் 25 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை அணி இறுதி ஓவரில் திரில் வெற்றிபெற்றது.

மிகவும் பரபரப்பாக இடம்பெற்ற இந்தப் போட்டியின் போது இறுதி ஓவரில், சென்னை வீரர் சாண்ட்னருக்கு,  ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் பந்து வீச்சாளர் பென்ஸ்டோக்ஸ் பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டார்.

இதன்போது முறையற்ற பந்து வீச்சொன்றை (புல்டோசாக) பென்ஸ்டோக்ஸ் வீசினார். இந்த பந்தை உடனடியாக நோபோலாக பிரதான நடுவர் அறிவித்தார். எனினும் மற்றைய நடுவர் அதற்கு நோபோல் தர மறுத்தார்.

இதனால், அதிருப்தி அடைந்த சாண்ட்னர் மற்றும் ஜடேஜா நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது போன்ற தருணங்களில் சாந்தமாக இருந்து கேப்டன் கூலாக செயற்படும் தோனி, வழமைக்கு மாறாக ஆக்ரோஷப்பட்டு ஆடுகளத்திற்குள் நுழைந்து நடுவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இருப்பினும் நடுவர்கள் அந்த பந்தை நோபோலாக அறிவிக்க மறுத்துவிட்டனர்.

கிரிக்கெட்டில் கேப்டன் கூல் என அழைக்கப்படும் தோனி நேற்று நடந்து கொண்ட விதம் அவரது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், தோனி உண்மையில் கூல் கேப்டன் தானா என்ற சந்தேகத்தையும் தோற்றுவித்துள்ளது.

அதுமாத்திரமல்லாது, நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தோனிக்கு ஐ.பி.எல். நிர்வாகம் போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் தொகையை அபராதமாக அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும் இறுதிப் பந்தில் சாண்டனர் விளாசிய ஆறு ஓட்த்தினால் சென்னை அணி திரில் வெற்றிபெற்று பட்டியலில் தொடர்ந்தும் முதலிடத்திலுள்ளமை குறிப்பிடத்தக்கது.