கிரிக்கெட் வரலாற்றில் நடுவர் மீது அதிக கோபமடைந்த டோனி!

ராஜஸ்தான் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியின் கடைசி ஓவரில் சென்னை அணி திரில் வெற்றி பெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான 25-வது லீக் போட்டியானது ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்றது.

இதில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை குவித்தது.

ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 28 ரன்களும், ஜோஸ் பட்லர் 23 ரன்களும் எடுத்திருந்தனர். சென்னை அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், தாகூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மிட்செல் சாண்ட்னர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணிக்கு ஆரம்பத்திலே அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, ஷேன் வாட்சன் 0 ரன், சுரேஷ் ரெய்னா 4 ரன், கேதர் ஜாதவ் 1 ரன், டு பிளிஸ்சிஸ் 7 ரன் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர்.

இதனால் ஆட்டத்தின் போக்கு மாறி ராஜஸ்தான் பக்கம் திரும்பியது. இந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த டோனி- அம்பத்தி ராயுடு நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி, இருவரும் அரை சத்தத்தை கடந்தனர்.

இதற்கிடையில் ராயுடு 17.4-வது பந்தில் 57 ரன்களை எடுத்து அவுட்டாகி வெளியேறினார். அதன்பிறகு களமிறங்கிய ஜடேஜா, டோனியுடன் ஜோடி சேர்ந்தார்.

கடைசி ஒரு ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்டபோது, படுத்துக்கொண்டே ஒரு அசாத்தியமான சிக்ஸரை அடித்து ஜடேஜா அசத்தினார். 2வது பந்து நோ பாலாக அமைய டோனி 2 ரன்களை எடுத்தார்.

கடைசி நேரத்தில் டோனி வெற்றி வாய்ப்பை பெற்றுத்தருவார் என அனைவரும் எதிர்பார்த்திருக்க, ஸ்டோக்ஸ் போட்ட யார்க்கர் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார்.

அடுத்த பந்தில் சாண்ட்னர் 2 ரன்களை எடுக்க ஒரு நடுவர் நோ பால் எனவும், மற்றொருவர் இல்லை எனவும் கூறினார். இதனால் மைதானத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட ஆத்திரமடைந்த டோனி, இதுவரை இல்லாத அளவிற்கு நேரடியாக மைதானத்திற்குள் கால்பதித்து நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்தார்.

இதனை பார்த்த மக்கள் அனைவரும் மைதானத்தில் கூச்சலிட ஆரம்பித்தனர்.

கடைசி ஒரு பந்தில் 3 ரன்கள் தேவைப்பட, சாண்ட்னர் திடீரென ஒரு சிக்ஸர் அடித்து சென்னை அணியின் வெற்றியினை உறுதி செய்தார்.

இந்த போட்டியின் மூலம் சென்னை அணியின் ஜடேஜா, 100 விக்கெட்டுகளை கடந்து சாதனை படைத்தார். அதேசமயம் ஐபிஎல் போட்டியில் 100 வெற்றிகளை கடந்த முதல் கேப்டன் என்கிற பெருமையினை டோனி பெற்றார்.