வெற்றியை தொடருமா சென்னை?

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 25வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது.

அஜிங்க்ய ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 4 தோல்விகளுடன் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் சொந்த மைதானத்தில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை அணியை இன்று எதிர்கொள்கிறது. இரு அணிகளும் இந்த சீசனில் 2-வது முறையாக மோதுகின்றன. கடந்த மாதம் 31-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணியிடம் 8 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தது.

தோனி தலைமையிலான சென்னை அணி இதுவரை 6 ஆட்டங்களில் 5-ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நேற்று முன்தினம் சேப்பாக்கத்தில் நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சென்னை அணி, தோனியின் புத்திசாலித்தனமான கேப்டன்ஷிப்பால் எந்தவிதமான ஆடுகளத்திலும் சிறப்பாக செயல்படுவதற்கான சமநிலையான அணியாக உள்ளது.

ராஜஸ்தான் அணி தொடக்க ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலைகளில் இருந்த போதிலும் அந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறியது. அதனால் இன்றை போட்டியில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றிபெற முடியும். கடைசியாக கொல்கத்தா அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி தனது சொந்த மைதானத்தில் விளையாடிய போதிலும் பெரிய அளவில் ரன்கள் குவிக்க முடியாமல் தடுமாறியது.