பாதிக்கப்பட்ட தரப்பிற்கு இழப்பீடு!

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பிற்கு இழப்பீடு வழங்குவது குறித்து அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் இலங்கை தொடர்பாக நேற்று தமது உத்தியோகப்பூர்வ அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பாச்லெட் சமர்ப்பித்தார்.

அதனைத் தொடர்ந்து உறுப்பு நாடுகள், குறித்த அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்தன. இதன்போதே பாகிஸ்தான் பிரதிநிதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்திற்கு பின்னர் இலங்கை பல காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்திற்கு பின்னர் வடக்கு கிழக்கில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளமையினை பாகிஸ்தான் பிரதிநிதி இதன்போது வரவேற்றுள்ளார்.

அத்துடன், தீர்வுகாணப்படாத பல பிரச்சினைகள் உள்ளதாகவும், அவை குறித்து ஆராய்ந்து தீர்வு பெற்றுக்கொடுப்பது அவசியமானது எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இலங்கை முன்னெடுத்துவரும் செயற்பாடுகளை பாகிஸ்தான் வரவேற்றுள்ளது.