குடும்பஸ்தரொருவரின் சடலம் மீட்பு!

திருகோணமலை, பன்மதவாச்சி காட்டுப்பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் புதன்கிழமை  (20.03.2019) மீட்கப்பட்டுள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பன்குளம், பன்மதவாச்சியைச் சேர்ந்த முத்துலிங்கம் ஸ்ரீதர் என்ற 57 வயதுடைய ஒருவரே இவ்வாறு   சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பன்மதவாச்சி வயலை அண்மித்த காட்டுப்பகுதியில் மாடுகளை மேய்க்கச் சென்ற இருவர், சடலத்தையும் அங்கு நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட முச்சக்கரவண்டியையும் அவதானித்து மொரவெவ பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொதுவைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதோடு, மேலதிக விசாரணைகளிலும் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.