கருணா, பிள்ளையான் குறித்து அதிர்ச்சி தகவல்கள்?

கிழக்கு மாகாணத்தில் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) சிவனேசன்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஆகியோருடன் சேர்ந்து சிறிலங்கா பாதுகாப்புப் படையினரும் இராணுவ உளவுத் துறையினரும் முப்பதாண்டுக்கு மேலாய் எங்கள் புதல்வியரையும் புதல்வர்களையும் கணவன்மாரையும் தந்தைமாரையும் ஏன் குழந்தைகளையும் கூட கடத்திக் கொண்டுபோய்க் காணாமற்செய்தனர்.போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வடகிழக்கு காணாமல் போன உறவுகளின் அமைப்புக்களினால் ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் மிசேல் பசலே அவர்களுக்கு அறிக்கை ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பினால் நேற்றையதினம்(19) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியிலேயே மேற்படி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது.

மாண்பு உயர் ஆணையாளர் அவர்களே!

ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் தமிழ் அமைப்புக்கள் விடுக்கும் ஒருமித்த வேண்டுகோள்.

சிறிலங்காவின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த காணாமற்போனவர்களின் தமிழ் அன்னையநாங்கள் ஐநா மனிதவுரிமைப் பேரவையின் நடப்பு அமர்வு குறித்தும் எங்கள் அன்பிற்குரியவர்களைக் கண்டுபிடிப்பதில் அதன் முக்கியத்துவம் கருதியும்இ நீதி பெறும் பொருட்டு இம்மடல் எழுதுகின்றோம்.

உங்களுக்கே தெரிந்திருக்கும் சிறிலங்காவில் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான தமிழர்கள் கானாமற்போயினர். சிறிலங்காவின் இராணுவ உளவுத்துறை ஏவி விடும் அச்சுறுத்தலையும் தாக்குதலையும் மீறிப் பல்லாண்டு காலமாய் எங்கள் அன்புக்குரியவர்களைத் தேடியலைகின்றோம்

கிழக்கு மாகாணத்தில் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) சிவனேசன்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஆகியோருடன் சேர்ந்து சிறிலங்கா பாதுகாப்புப் படையினரும் இராணுவ உளவுத் துறையினரும் முப்பதாண்டுக்கு மேலாய் எங்கள் புதல்வியரையும் புதல்வர்களையும் கணவன்மாரையும் தந்தைமாரையும் ஏன் குழந்தைகளையும் கூட கடத்திக் கொண்டுபோய்க் காணாமற்செய்தனர்.

அன்னையர் தம் அன்பிற்குரியவர்களைத் தேடிச் சென்ற போது பாதுகாப்புப் படையினரும் ஒட்டுக்குழுவினரும் அவர்களைத் தாக்கி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கினர். படையினருடன் சேர்ந்து வேலை செய்யும் தனியாட்களும் உள்ளனர். இவர்கள் காணாமற்போனவர்களின் குடும்பத்தினரைப் போய்ப் பார்த்து காசு கொடுத்தால் காணாமற்போனவர்களைக் கண்டுபிடித்துக் கொடுப்பதாக வாக்களிக்கின்றனர். பல நேரம் அவர்களைத் தனியிடத்துக்குக் கூட்டிச் சென்று அங்கே இராணுவத்தினரும் ஒட்டுக்குழுவினரும் இந்தப் பாவப்பட்ட அன்னையரைச் சீரழித்து விடுகின்றனர். காணாமற்போனவர்களின் அன்னையரும் குடும்பத்தினரும் ஆண்டுக்கணக்காக இந்த அவலத்துக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

காணாமற் செய்தமைக்குப் பொறுப்பானவர்களைத் தண்டிக்க வேண்டிய அரசு அவர்களுக்கு ஏற்றம் தந்து வெவ்வேறு நாடுகளுக்கும் ஐநாவுக்கும் அவர்களைத் தூதியல் பணியில் அனுப்பி வைத்தது. ஒட்டுப்படைத் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) முதன்மை அமைச்சராக்கப்பட்டார். சிவநேசன்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஆளுங்கட்சிப் பொறுப்பாளராக்கப்பட்டார்.

எங்கள் அன்புக்குரிய உறவுகளுக்கு என்ன நேரிட்டது என்று தெரியாத மனவலியோடுதான் தொடர்ந்து வாழ்கிறோம். உண்ணவோ உறங்கவோ முடியாமல்இ எதிலும் கவனஞ்செலுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். தொடர்ந்து நலிவுற்றுச் சாய்கிறோம். எங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன நேரிட்டிருக்குமோ என்று நாங்கள் எண்ணி எண்ணித் துன்புறாத நாளில்லை.

அவர்கள் உயிரோடிருக்கிறார்களா?

எங்கள் குழந்தைகள் என்ன ஆனார்கள்?

எங்கள் புதல்வியர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனரா?

அவர்களைச் சித்திரவதை செய்து கொண்டிருக்கின்றனரா?

காணாமற்போன எங்கள் அன்பிற்குரியவர்களின் விடுதலையைப் பெற்றுத்தர உங்கள் பொறுப்பைப் பயன்படுத்துமாறும் பாதுகாப்புப் படையினரும் ஒட்டுக்குழுவினரும் பன்னாட்டு நீதிக்கு முன்னிற்கும்படி செய்யுமாறும் உங்களை வேண்டுகிறோம்.

எங்கள் பணிவான வேண்டுகோள் :

1) சிறிலங்கா விரிக்கும் “உண்மையும் மீளிணக்கமும்” போன்ற வலையில் விழுந்து விடாதீர்கள் சிறிலங்காவுக்கு எவ்விதக் கூடுதல் கால அவகாசமும் கொடுத்து விடாதீர்கள். கால நீட்டிப்புத் தருவது தமிழ்ப் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள சிறிலங்கா பாதுகாப்புப் படைகள் தங்கள் உரிமைமீறல்களைத் தொடர்ந்து செய்யவும் முக்கியமான போர்க்குற்ற சான்றுகளை அழிப்பதற்கும் உதவுவதாகி விடும். மேலும் கூடுதல் கால அவகாசம் கொடுப்பது தமிழர்களுக்கு நிரந்தரமாக நீதியை மறுப்பதாகி விடும்.

2) சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் அல்லது சிறிலங்காவுக்கென்றே அமைக்கப்படும் சிறப்புப் பன்னாட்டுக் குற்றத் தீர்ப்பாயத்தின் பார்வைக்கு அனுப்புங்கள்.

3) போரினால் பாதிப்புற்றவர்களின் துயரம் குறித்தும் மனிதவுரிமை மனித நேயம் தொடர்பிலான மற்ற சிக்கல்கள் குறித்தும் கண்காணித்து ஆறு மாதத்துக்கொரு முறை மனிதவுரிமைப் பேரவைக்கு அறிக்கை அளிப்பதற்கென சிறிலங்காவுக்கான சிறப்பு அறிக்கையாளரை அமர்த்துங்கள்.

எமது வேண்டுகோளுக்குரிய காரணம் இதோ:
பின்னணி:

போர் முடிந்து சற்றொப்பப் பத்தாண்டு முடிந்து விட்ட போதிலும் சிறிலங்கா அரசாங்கம் புரிந்த பெருந்திரள் கொடுமைகளுக்கு நீதி வேண்டி இன்னமும் காத்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஐநாவும் பிற பன்னாட்டு அமைப்புகளும் கூறியுள்ளபடி 2009 மே திங்கள் முடிவுற்ற போரின் இறுதி ஆறு மாதங்களில் சிறிலங்கப் பாதுகாப்புப் படையினரால் பத்தாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் ஏராளமான தமிழ்ப்பெண்கள் பாலியல் வன்தாக்குக்கும் வல்லுறவுக்கும் ஆளானார்கள். .

சிறிலங்காவில் பொறுப்புக்கூறல் குறித்து ஐநா பொதுச் செயலர் அமைத்த வல்லுநர் குழுவின் அறிக்கை… போரின் இறுதி ஆறு மாதக் காலத்தில் போர்க் குற்றங்களும் மானிட விரோதக் குற்றங்களும் நடைபெற்றதாகவும் தமிழ்ப் பொதுமக்கள் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாகவும் கூறியது.

மேலும் சிறிலங்காவில் ஐநா செயல்பாடு என்பது குறித்து ஐநா பொதுச் செயலரின் உள்ளக ஆய்வுக்குழு 2012 நவம்பரில் அளித்த அறிக்கையின்படி 2009இல் போரின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் தொகை 70 ஆயிரமாக உயர்ந்தது.

போரின் இறுதி ஆறு மாதக் காலத்தில் ஐநா மற்றும் பன்னாட்டுச் செய்தியாளர்கள் சண்டை நடக்கும் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு போர் முழு இரகசியமாகவே நடத்தப்பட்டது. படைத்துறை சாராத இலக்குகளும் மருத்துவமனை உணவுப் பங்கீட்டு மையங்கள் போன்ற பன்னாட்டளவில் பாதுகாப்புப் பெற்ற மையங்களும் குண்டுவீச்சுக்கும் செல்லடிக்கும் உள்ளாக்கப்பட்டன.

தமிழர்கள் பாதுகாப்புக்காகக் கூடியிருந்த “சூட்டுத்தவிர்ப்பு வலையம்” என்று அழைக்கப்பட்ட பாதுகாப்புப் பகுதியில் நிகழ்ந்த கடுமையான குண்டுவீச்சும் செல்லடியும்தான் பெரும்பாலாரைச் சாகடித்தன. சிறிலங்கா மருத்துவமனைகள் மீது குண்டுவீசியதோடு “சூட்டுத்தவிர்ப்பு வலையத்தில்” சிக்கிக்கொண்டவர்களுக்குப் போதிய உணவும் மருந்தும் கிடைக்க விடாமலும் தடுத்த போது பட்டினியாலும் குருதியிழப்பாலும் செத்தவர்கள் பலர்.

ஐ.நா வரிசைப்படுத்தியுள்ளபடி காணாமற்போனவர்களின் தொகையில் உலக அளவில் சிறிலங்கா இரண்டாமிடத்தில் உள்ளது. குழந்தைகளும் பெண்களும் உட்பட 20 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களைக் காணவில்லை என்று ஐநா கணக்கிட்டுள்ளது.

பெண்கள் சந்தித்த பெருங்கொடுமைகள்

உண்மை மற்றும் நீதித் திட்டக் குழுவினர் அளித்த அறிக்கை சிறிலங்கப் படை நடத்திய “வல்லுறவு முகாம்கள்” பற்றிய தரவுகளை வெளியிட்டது. இந்த முகாம்கள் தமிழ்ப் பெண்களைப் பாலியல் அடிமைகளாக வைத்திருந்தன.

இந்த அறிக்கை சொல்கிறது:

”மூத்த அதிகாரி அறைக்குள் வந்தார். நாங்கள் ஏதோ இறைச்சி அங்காடியில் கடைவிரிக்கப்பட்டுள்ள இறைச்சி என்பது போல் தனக்குப் பிடித்ததைப் பொறுக்கியெடுத்துக் கொள்ளும்படி அவரிடம் கூறினர். அவர் சுற்றுமுற்றும் பார்த்து என்னைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். என்னை வேறு அறைக்குக் கூட்டிப்போய் வன்புணர்வு செய்தார்.”

“பெண்களில் இருவர் விவரித்தபடி அவர்கள் ஓர் அறையில் குழுவாக அடைத்து வைக்கபட்டனர். எந்தப் படையாள் வேண்டுமானாலும் அங்கு வந்து ஒருவரைப் பொறுக்கியெடுத்து அடுத்த அறைக்கோ கூடாரத்துக்கோ கொண்டுசென்று வன்புணர்வு செய்யலாம்” என்கிறது உண்மை மற்றும் நீதித்திட்டக் குழு.

போரினால் கணவரிழந்த தமிழ்ப் பெண்கள் சற்றொப்ப 90 ஆயிரம் தமிழ்ப் பெண்கள் போரினால் கணவரிழந்து கைம்பெண்களாகியுள்ளனர். இவர்களுக்கு குறிப்பாக இவர்களின் மகள்களுக்குப் பாதுகாப்புப் படையினர் தரும் இடர்கள் ஏராளம்.

பாலியல் கொடுமைகள் புரிந்த அதே பாதுகாப்புப் படையினர் இன்றளவும் தமிழ்ப் பகுதிகளில் பெருந்தொகையாக நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த பாலியல் வன்முறையாலும் கொலைகளாலும் துயருற்ற அதே பெண்களுக்கு நடுவில் — யாருடைய கணவன்மாரும் குழந்தைகளும் இவர்களால் காணாமற்செய்யப்பட்டார்களோ அதே பெண்களுக்கு நட்டநடுவில் — இந்தப் படையினர் வாழ்ந்து வருகின்றனர். தங்களைக் கெடுத்த அதே படையாட்கள் அடுத்தடுத்த ஆட்சியாளர்களின் முழுப் பாதுகாப்பும் ஆதரவும் பெற்று விடுமையுடன் நடமாடிக் கொண்டிருப்பதைப் பார்த்துத் தமிழ்ப் பெண்கள் அச்சத்துக்கும் அவமானத்துக்கும் ஆளாக வேண்டிய நிலையில் உள்ளனர்.

காணாமற்போனவர்களின் தமிழ்த் தாய்மார்கள் காணாமற்போன தங்கள் குழந்தைகளையும் மகள்மகன்களையும் கணவன்மாரையும் கண்டுபிடித்துத் தரச் சொல்லி இயக்கம் நடத்தி வருகின்றார்கள். இராணுவ உளவுத் துறையும் பாதுகாப்புப் படையினரும் ஏவி விடும் அச்சுறுத்தலுக்கும் தாக்குதல்களுக்கும் அவர்கள் முகங்கொடுக்க வேண்டியுள்ளது.

காணாமற்போனோர் அலுவலகம் (OMP):

சிறிலங்கா அரசாங்கம் பன்னாட்டுச் சமுதாயத்துக்கு குறிப்பாக ஐநா மனிதவுரிமைப் பேரவைக்கு மனநிறைவளிக்கும் பொருட்டு காணாமற்போனோர் அலுவலகத்தை அரைமனதாகவே நிறுவியது.

முன்னாள் மூத்த இராணுவ அதிகாரி ஒருவரை ஆணையர்களில் ஒருவராகக் கொண்ட காணாமற்போனோர் அலுவலகத்தை நாங்கள் நம்புவது கடினம். மேலும் காணாமற்போனோர் அலுவலகத்தை நிறுவிய சட்டத்தின் படி காணாமற்போனோர் அலுவலகம் பெற்ற எந்தச் சான்றையும் ஐயத்துக்குள்ளான எந்தக் குற்றவாளி மீதும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதற்குப் பயன்படுத்த முடியாது. ஆகவே எங்கள் அன்புக்குரியவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கவும் நீதிபெறவும் பன்னாட்டுப் பொறிமுறைகளை மட்டுமே நம்பியிருக்கிறோம். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.