யாழில் ஒருவரை வெட்டிவிட்டு இரத்தத்தில் பொட்டு வைத்த ரௌடிகள்!

யாழ்ப்பாண நகரில் வாடகைக் காரை மறித்து சாரதி மீது வாள்வெட்டுத் தாக்குதலை நடத்திவிட்டு ரௌடிகள் தப்பிச் சென்றுள்ளனர். அத்துடன், படுகாயமடைந்த சாரதியின் குருதியைத் தொட்டு பொட்டு வைத்த ரௌடிகள், அவரது காரின் கமராவையும் அபகரித்துத் தப்பித்ச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் வேம்படி விதியில் இன்று நண்பகல் இடம்பெற்றது.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் கோவில் வீதியைச் சேர்ந்த குணசிங்கம் ரஜீவ்குமார் என்பவரே படுகாயமடைந்தார்.

யாழ்ப்பாண நகரில் கார் ஓட்டுனராக இருக்கும் அவர் பயணிகளை ஏற்றிக் கொண்டு வேம்படி வீதியால் இன்று நண்பகல் பயணித்துக் கொண்டிருந்த போது, கறுப்பு நிற கார் ஒன்று அவரது காரை இடை மறித்துள்ளது.

அதே நேரத்தில் 5 மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த ரௌடிகள், கார் சாரதியை வெட்டி காயப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளது.

படுகாயமடைந்த சாரதியை அப்பகுதியில் நின்றவர்கள் மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்த்தனர்.

தனிப்பட்ட முரண்பாடு காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகப் பொலிஸார் கூறுகின்றனர். அத்துடன், தாக்குதலாளிகள் கார் சாரதிக்கு அறிமுகமானவர்கள் எனவும் அவர்கள் யாழ்ப்பாணம் பிட்டிப்பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.