கணவர் வெளிநாட்டில்! வடக்கில் மனைவிக்கு நேர்ந்துள்ள கொடூரம்!

வடக்கின் முக்கிய மாவட்டமான வவுனியாவின், நெளுக்குளம் சுற்றுவட்ட வீதி பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இரு பிள்ளைகளின் தாயொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் சடலம் இன்று அதிகாலை கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ள பெண்ணின் கணவர் வெளிநாட்டுக்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் குறித்த பெண்ணும் அவரது இரு பிள்ளைகளும் தனிமையில் இருந்துள்ளனர். இவர்களுக்கு பாதுகாப்பாக அயல் வீட்டு பெண்ணொருவரும் இவர்களுடன் இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்றிரவு 11.30 மணிக்கு பின்னர் குறித்த பெண்ணிற்கு கணவர் தொலைபேசி அழைப்பு மேற்கொண்டுள்ளார். எனினும் பெண் அழைப்பினை எடுக்கவில்லை என தெரியவருகிறது.

சந்தேகத்தில் அயல் வீட்டார் ஒருவருக்கு, பெண்ணின் கணவன் தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு மனைவி தொலைபேசி அழைப்பினை எடுக்கவில்லை சற்று சென்று பார்க்குமாறு தெரிவித்துள்ளார்.

அயல் வீட்டார் குறித்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற நேரத்தில் பெண்ணின் இரு பிள்ளைகளும் அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்த பெண்ணும் உறங்கி கொண்டிருந்த போதும், பிள்ளைகளின் தாயை காணவில்லை என தெரிவிக்கின்றனர்.

அவரை தேடிய நிலையில் வீட்டிலுள்ள அறைகளை சென்று பார்த்த போது ஒரு அறையில் இரத்தம் காணப்பட்டுள்ளது. இதன் பின்னரே பாவனையற்ற கிணற்றில் சடலம் மிதப்பதை அயலவர்கள் அவதானித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்த வவுனியா மற்றும் நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிஸாரினால் குற்றத்தடவியல் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்திற்கு விரைந்த குற்றத்தடவியல் பொலிஸாரால் கிணற்றுக்கு செல்லும் பாதையில் இருந்து கத்தியொன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இரு பிள்ளைகளின் தாயை வெட்டிக்கொலை செய்து விட்டு கிணற்றில் தூக்கி எறிந்திருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

11 மற்றும் 5 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயாரான கௌரி (வயது 32) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரியவருகிறது.