மூதாட்டி கழுத்தறுத்து கொலை!

கோவையில் வீடு வாடகைக்கு கேட்பது போல நடித்து, மர்ம நபர்கள் மூதாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்து, ஐந்தரை பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அருகே செளரிபாளையம் பகுதியை அடுத்த அன்னை வேளாங்கண்ணி நகரில் வசித்து வந்தவர் மேரி ஏஞ்சலின். ஓய்வுபெற்ற செவிலியரான இவர், அந்த பகுதியில் உள்ள தனது வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு நேரத்தில், அவரது வீட்டிற்கு வந்த ஒரு ஆணும், பெண்ணும், வீடு வாடகைக்கு உள்ளதா என்பதை கேட்டு உள்ளனர். இது குறித்து மேரி ஏஞ்சலின் பேசிகொண்டிருந்தபோது, திடீரென அவரை தாக்கிய அந்த ஆணும் பெண்ணும்,  அவர் அணிந்து இருந்த ஐந்தரை பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மேலும் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்த மர்ம நபர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதனையடுத்து சில மணி நேரம் கழித்து அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது, மேரி ஏஞ்சலின் கழுத்து அறுக்கப்பட்டு இறங்து கிடந்து உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளித்ததை தொடா்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மேரி ஏஞ்சலின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.