குடிநீரில் கலந்த சாக்கடை நீர்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

கோவை புலியகுளம் பகுதியில் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதை கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை புலியகுளம் பகுதியில் உள்ள கருப்பராயன் கோவில் வீதியில் , கடந்த நான்கு மாதங்களாக குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருகிறது. அந்த நீரை குடிக்கும் பொதுமக்கள் காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற தொற்று நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதை, பல முறை மாநகராட்சி அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்துச் சென்றும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும் கடந்த நான்கு மாதங்களாக மாநகராட்சி பணியாளர்கள் குடிநீர் குழாயை சரி செய்வது போல் குழிகளை தோண்டி போட்டுள்ளனர். ஆனால் தற்போது வரை தண்ணீர் பிரச்சினை தீரவில்லை. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் புளியகுளத்தின் பிரதான சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இந்த சாலை மறியலில் மாநகராட்சியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பின்னர் அங்கு வந்த ராமநாதபுரம் காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். மேலும் குடிநீர் குழாயை சரி செய்ய வில்லை என்றால் மீண்டும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.