போலீஸை தாக்கிய நடிகை!

சாலையில் காரை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதை தட்டிக்கேட்ட காவலரை, நடிகை ஜூலி தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் வேப்பேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை வேப்பேரி டவுட்டன் ரித்தர்ட்டன் சாலையில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் கார் ஒன்று நீண்ட நேரமாக சாலையின் குறுக்கே  நின்றுள்ளது. இந்நிலையில் வேப்பேரி காவல் நிலைய தலைமை காவலர் பூபதி, மேலும் 2 காவலர்களுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது ரித்தர்ட்டன் சாலையில் நீண்ட நேரமாக வாகனங்கள் நெரிசலுடன் காணப்பட்டதால், தலைமை காவலர் பூபதி தனது பைக்கை நிறுத்திவிட்டு போக்குவரத்தை சரிசெய்ய சென்றுள்ளார்.

அப்போது, சாலையின் குறுக்கே நின்ற காரில் நடிகை ஜூலி மற்றும் அவரது ஆண் நண்பர்கள் பிரசாத் உட்பட 2 பேர் இருந்துள்ளனர். இதை பார்த்த தலைமை காவலர், காரை ஏன் நடுரோட்டில் நிறுத்தி வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு காரில் இருந்த பிரசாத், உன் வேலையை பார்த்து செல் என்று கூறியதால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் தலைமை காவலரை காரில் இருந்த பிரசாத் தாக்கிய நிலையில், பதிலுக்கு தலைமை காவலரும் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பிரசாத் தனது சக நண்பர்களை போன் செய்து வரவழைத்து தலைமை காவலர் பூபதியை சாலையிலேயே கடுமையாக தாக்கி விட்டு சென்றுள்ளனர். இந்த தாக்குதலில் தலைமை காவலர் பூபதிக்கு முகத்தில் காயம் ஏற்பட்டதை தொடாந்து, வேப்பேரி போலீசில் தன்னை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், தனது மருத்துவ செலவுக்கு ரூ.2 லட்சம் பெற்று தர வேண்டும் என்றும் வாய்மொழியாக புகார் அளித்துள்ளார்.

அதேபோல் நடிகை ஜூலி தரப்பினரும் தலைமை காவலர் பூபதி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இரண்டு புகார்களின் அடிப்படையில் போலீசார் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் வேப்பேரியில் பரபரப்பு ஏற்பட்டது.