விசித்திரமான இந்திய அணி! வீரர்களை நீக்கிய கோலி!

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வரும் நிலையில் நான்கு போட்டிகள் முடிந்த நிலையில் இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் தொடர் சமன் நிலையில் உள்ளது. இந்நிலையில் தொடரை நிர்ணயிக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது.

முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்த இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து தொடரில் பின்னடைவை சந்தித்துள்ளது. உலக கோப்பை அணியை தேர்வு செய்யும் விதமாக புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக இந்திய அணியில் பல பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்வதால் இந்திய அணிக்கு இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஏனெனில் கடந்த 2015 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய மண்ணில் இழந்த இந்திய அணி, அதன் பிறகு தொடர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறது. அதனை தக்க வைக்க இந்த போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதேபோல் இதற்கு முன் தொடர்ச்சியாக மூன்று ஒருநாள் போட்டிகளை இந்தியாவில் இந்தியா இழந்தது 2009-ம் ஆண்டுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. பத்து வருடங்களுக்கு பிறகு, அதே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மீண்டும் ஒரு துயரமான தோல்வி நடந்து விடாமல் தடுக்கவும் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். பேட்டிங்கில் சாதகமான ஆடுகளம் ஆடுகளத்தில் அதிக அளவில் ரன்கள் குவிக்க முடியும் பின்னர் இந்திய அணியை சுருட்ட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது அந்த அணியின் மார்ஷ், பெஹரனடாப் நீக்கப்பட்டு ஸ்டோனிஸ், லியோன் இணைக்கப்பட்டுள்ளனர். அதேபோல இந்திய அணியில் ராகுல், சாஹல் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக மீண்டும் ஜடேஜா முகமது சமி இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணியில் ரோஹித், தவான், கோலி, பாண்ட், ஜாதவ் தான் முன்னணி பேட்ஸ்மேன்கள் என்றாலே கொஞ்சம் உதறலாக தான் இருக்கிறது. பின் வரிசையில் ஷங்கர், ஜடேஜா, குல்தீப், புவனேஷ்வர் என கொஞ்சம் தெம்பூட்டுகிறார்கள்.