தொழில் பெற்று தருவதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய சந்தேக நபர்!

பொகவந்தலாவை, தோட்ட பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை தொழில் பெற்று தருவதாக கூறி கொழும்பிற்கு அழைத்து வந்து கர்ப்பமாக்கிய சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு, அலுத்கடை நீதிமன்றில் குறித்த சந்தேக நபரை இன்று முன்னிலைப்படுத்திய போதே எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொகவந்தலாவ பகுதியில் உள்ள தோட்டப் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை 40 வயதுடைய சந்தேக நபர் தொழில் பெற்றுதருவதாக கூறி கொழும்பிற்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

குறித்த சிறுமி கர்ப்பமாகியுள்ளமை குறித்து அவரது தாயாருக்கு தெரியவந்துள்ளதையடுத்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சிறுமியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதோடு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தற்போது சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.