பதிலடி கொடுக்குமா?, தொடரை இழக்குமா?

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டீகொக் சதம் விளாசியதுடன் தென்னாபிரிக்க அணி வெற்றியிலக்காக 332 ஓட்டங்களை குவித்துள்ளது.

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள லசித் மலிங்க தல‍ைமையிலான இலங்கை அணி தென்னாபிரிக்க அணியுடன் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் ஜோகன்னஸ்பர்க்கில் கடந்த 03 ஆம் திகதி இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுக்களினாலும், செஞ்சூரியனில் 06 ஆம் திகதி இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 113 ஓட்டத்தினாலும் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றது.

இந் நிலையில் இவ் விரு அணிகளுக்கிடையயோன மூன்றாவது ஒருநாள் போட்டி டர்பனில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. இப் போட்டியில் தென்னாபிரக்க அணி வெற்றிபெற்றால் தொடர் தென்னாபிரக்க அணி வசமாகிவிடும் ஆகவே இப் போட்டியில் தென்னாபிரிக்க அணி தொடரை கைப்பற்றி, டெஸ்ட் தொடருக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற வேட்கையுடன் களமிறங்கியுள்ளது.

மறுமுணையில் இலங்கை அணியும் இப் போட்டியை எப்படியாவது வெற்றி கொண்டு தொடரை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கியுள்ளது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சினை தெரிவு செய்ய தென்னாபிரிக்க அணி முதலாவதாக துடுப்பெடுத்தாட ஆடுகளம் நுழைந்தது.

அணி சார்பில் ஹேண்ட்ரிக்ஸ் மற்றும் டூப்பிளஸ்ஸி ஆரம்ப வீரர்களாக களமிறங்கி துடுப்பெடுத்தாடிவர ஹேண்ட்ரிக்ஸ் 4 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். இதனால் தென்னாபிரிக்க அணியின் முதல் விக்கெட் 24 ஓட்டத்துக்கு வீழ்த்தப்பட்டது.

எனினும் இரண்டாவது விக்கெட்டுக்காக டூப்பிளஸ்ஸி மற்றும் டீகொக் ஜோடி சேர்ந்தாட இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களுக்கு விக்கெட்டுக்களை வீழ்த்துவது காணல் நீராகவே போனது.

இதனால் தென்னாபிரிக்க அணி முதல் 10 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை இழந்த நிலையில் 58 ஓட்டங்களையும், 14.1 ஓவரில் 100 ஓட்டங்களையும் குவித்தது. ஆடுகளத்தில் டீகொக் 63 ஓட்டத்துடனும் டூப்பிளஸ்ஸி 31 ஓட்டத்துடனும் தொடர்ந்தும் துடுப்பெடுத்தடி வந்தனர்.

எனினும் அணித் தலைவர் டூப்பிளஸ்ஸி 16.2 ஆவது ஓவரில் மலிங்கவின் பந்து வீச்சிள் 36 ஓட்டத்துடன் திக்வெல்லவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் தென்னாபிர்க்க அணி 121 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டை இழந்தது.

இதையடுத்து டாஸன் களமிறங்கி துடுப்பெடுத்தாட ஆரம்பிக்க போட்டியில் நிலைத்தாடி வந்த டீகொக் 24 ஆவது ஓவரின் முதல் பந்தில் 89 பந்துகளை எதிர்கொண்டு சதம் விளாசினார்.

இருப்பினும் அவர் அதிரடியாக ஆட முற்பட 30 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் மொத்தமாக 108 பந்துகளில் 2 ஆறு ஒட்டம் 16 நான்கு ஓட்டம் அடங்களாக 121 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற, டாஸன் அரைசதத்துடன் 39.2 ஆவது ஓவரில் கமிந்து மெண்டீஸின் பந்தில் ஆட்டமிழந்தார்.

இவர்களின் வெளியேற்றத்தையடுத்து 5 ஆவது விக்கெட்டுக்காக டேவிட் மில்லர் டிவைன் ப்ரோட்டோரியஸ் கைகோர்த்தாட 42 ஆவது ஓவரில் தென்னாபிரிக்க அணி 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 253 ஓட்டங்களை பெற்றது. மில்லிர் 23 ஓட்டத்துடனும், டிவைன் ப்ரோட்டோரியஸ் 10 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர்.

இறுதியாக தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5  விக்கெட்டுக்களை இழந்து 331 ஓட்டங்களை குவித்தது. ஆடுகளத்தில் மில்லர் 41 ஓட்டத்துடனும், பெலக்கொய்யோ 38 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இதன் மூலம் இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 332 ஓட்டங்கள் நிர்ணியிக்கப்பட்டது.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் இசுறு உதான 2 விக்கெட்டுக்களையும், மலிங்க, கவிந்து மெண்டீஸ் மற்றும் கசூன் ராஜித ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.