தில்லாலங்கடி வேலை செய்த கோஹ்லி: முதன்முறையாக மனம் திறந்த அனுஷ்கா

திருமணம் முடிந்து 1 வருடத்திற்கும் மேல் ஆகிவிட்ட நிலையில், ரகசியமாக நடந்த திருமண நிகழ்வு குறித்து விராட்கோஹ்லியின் மனைவி அனுஷ்காசர்மா மனம் திறந்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் விராட்கோஹ்லி மற்றும் பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவின் திருமணம் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இத்தாலியில் நடைபெற்றது.

ரகசியமாக நடந்த இந்த திருமண நிகழ்வில் இருவருக்கும் நெருங்கிய உறவினர்களான 45 பேர் மட்டுமே கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் திருமணம் நிகழ்வு குறித்து தனியார் தொலைக்காட்சியில் பேசியிருக்கும் நடிகை அனுஷ்கா சர்மா, எங்களுடைய திருமண நிகழ்வு பற்றி குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள், திருமண விழாவை நடத்திய ஈவென்ட் மேனேஜர் மற்றும் ஒப்பனையாளர் என 45 பேருக்கு மட்டுமே தெரியும்.

இருவரும் இந்தியாவில் மிகவும் பிரபலமானவர்கள் என்பதால், இங்கு திருமண நடத்துவதில் மிகவும் சிரமம் என்று எங்களுடைய மேனேஜர் கூறினார்.

இதனால் இத்தாலியில் திருமணத்தை வைத்துவிட்டு, வரவேற்பு நிகழ்ச்சியினை இந்தியாவில் வைக்கலாம் என திட்டமிட்டோம். ஆனால் இத்தாலியில் திருமணத்தை முன்பதிவு செய்வதற்கு கூட சிரமம் இருந்தது. இதனால் விராட்கோஹ்லியின் பெயரை ராகுல் என மாற்றி திருமணம் செய்தோம்.

அதன் பிறகு இந்திய திரும்பியதும் எங்களது உண்மையான பெயரில் திருமணத்தை பதிவு செய்து திருமண பதிவு சான்றிதழ் வாங்கினோம் என கூறியுள்ளார்.