சடலமாக மீட்கப்பட்ட இந்திய வம்சாவளி பெண்!

அவுஸ்திரேலியாவில் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து மாயமான இந்திய வம்சாவளி பெண் மருத்துவர் சூட்கேசில் அடைத்து வைக்கப்பட்டபடி சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வம்சாவளி பெண் மருத்துவரான பிரீத்தி ரெட்டி (32) அவுஸ்திரேலியாவில் பல் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சிட்னியில் நடைபெற்ற மருத்துவ மாநாட்டில் பங்கேற்றுள்ளார்.

ஆனால் அன்றைய தினம் இரவு அவர் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவருடைய தங்கை நித்யா பெரும் கவலையுடன் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதனடிப்படையில் ப்ரீத்தியின் முன்னாள் காதலனிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மாநாடு முடிந்த பின்னர் ப்ரீத்தி முன்னாள் காதலனுடன் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தது தெரியவந்தது. அதோடு அல்லாமல் அவருடைய முன்னாள் காதலனும் ஒரு பல் மருத்துவர் என்பதும், அவரும் மாநாட்டில் கலந்து கொண்டார் என்பதும் தெரியவந்தது.

இந்த விசாரணை முடிந்த அடுத்த சில மணிநேரங்களிலே, சிட்னியில் இருந்து 4 மணி நேர பயணமாக இங்கிலாந்து நெடுஞ்சாலையில் காரில் சென்றுகொண்டிருந்த அந்த இளைஞர், திடீரென எதிரில் வந்த காரில் மோதி விபத்தில் சிக்கி இறந்துள்ளார்.

இதனால் பொலிஸாருக்கு சந்தேகம் வலுக்க ஆரம்பித்தது. உடனே அவர் தங்கியிருந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, காதலனுடன் அறைக்கு செல்வதற்கு முன்பு ப்ரீத்தி அங்கிருந்த ஒரு கடைக்கு சென்று வந்தது பதிவாகியிருந்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு பிறகு இதுவரை ப்ரீத்தியின் செல்போன் எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை என அவருடைய குடும்பத்தினர் பேஸ்புக்கில் வேதனை தெரிவிக்க ஆரம்பித்தனர்.

இதனையடுத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்திய பொலிஸார், ப்ரீத்தியின் கார் கிங்ஸ்ஃபோர்ட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை கேள்விப்பட்டு வேகமாக விரைந்தனர்.

அங்கு காரின் பின் பகுதியை திறந்த பொழுது ஒரு சூட்கேஸ் இருந்துள்ளது. அதனுள் இருந்த ப்ரீத்தியின் உடலில் பல முறை கத்தியால் குத்தப்பட்டதற்கான தடயங்கள் இருந்தது.

இந்த நிலையில் அவருடைய உடலை கைப்பற்றியுள்ள பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.