தீயில் சிக்கிய தம்பியை காப்பாற்ற உயிரைவிட்ட 12 வயது சிறுமி!

சீனாவில் 12 வயது சிறுமி தனது தம்பியை தீயில் இருந்து காப்பாற்ற உயிரை விட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஹுனான் மாகாணத்தில் கடந்த பிப்ரவரி 22ஆம் திகதி, சென் ஸிமோ என்ற 12 வயது சிறுமி தனது தம்பியுடன் வீட்டில் உள்ள தனி அறையில் தூங்கிக்கொண்டிருந்தார். அவரது பெற்றோர் பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், ஏதோவொரு வாசனை திடீரென வந்ததைத் தொடர்ந்து சென் ஸிமோ விழித்துக் கொண்டார். அறையின் ஜன்னல்கள் தீப்பிடித்து எறிந்து மெத்தையிலும் பரவத் தொடங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

அதனைத் தொடர்ந்து சற்றும் யோசிக்காத ஸிமோ, தன் போர்வையை தம்பியின் மீது போர்த்திவிட்டு, வேறு போர்வையை கொண்டு தீயை அணைக்க முயற்சி செய்தார். ஆனால் அந்த முயற்சியில் அவர் மயங்கி விழுந்துவிட்டார்.

தீ விபத்து ஏற்பட்டுள்ளதை உணர்ந்த ஸிமோவின் பெற்றோர் அங்கு வந்தனர். ஸிமோவின் தம்பி குறைவான தீக்காயங்களுடன் இரண்டு போர்வைக்குள் மயங்கிக் கிடந்தான். ஆனால், ஸிமோவின் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டிருந்தது.

உடனடியாக ஸிமோவின் பெற்றோர் இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஸிமோ மற்றும் அவரது தம்பிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அதிகப்படியான தீக்காயம் ஏற்பட்டதால் ஸிமோ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து ஸிமோவின் தந்தை கூறுகையில், ‘ஒரு வேளை ஸிமோ தன் கனமான போர்வையை தானே போர்த்திக்கொண்டு இருந்திருந்தால், ஓரளவுக்கு காயங்களுடன் பிழைத்திருப்பாள். ஆனால், அவள் தன் தம்பியைத் தீ நெருங்கவிடாமல் இருக்கவே போராடிக் கொண்டிருந்திருக்கிறார்.

எங்களுக்கு 2வது மகன் பிறந்ததுமே ஸிமோவைப் பற்றி நாங்கள் அதிகம் கவலைப்படவில்லை. அவளை அவளே பார்த்துக்கொள்வாள். எங்கள் மகனைப் பார்த்துக் கொள்ளவே அதிக நேரம் செலவிட்டோம். இன்று ஸிமோ எங்களோடு இல்லை. ஆனால், அவள் இல்லாத ஒவ்வொரு நொடியும் நரகமாக சுடுகிறது’ என தெரிவித்துள்ளார்.