ப்ரோக்கோலி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? வியக்கும் ஆய்வாளர்கள்

ப்ரோக்கோலி மிகவும் அற்புதமான அதிசய உணவுவகை. இந்த கால கட்டத்தில் அவசியம் தேவைப்படும் உணவுகளில் இதுவும் ஒன்று. காரணம் புற்று நோய்.

எத்தனையோ மோசமான கெமிக்கல்கள் நம் உடலுக்குள் உணவு, சுற்றுபுற சூழ் நிலை மூலமாக வந்தடைகிறது. விளைவு கொடிய நோய்கள்.

இதற்காக நிறைய காய்களிலுள்ள சத்துக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. அவ்வகையில் புருக்கோலி தலை மற்றும் கழுத்தில் உண்டாகும் புற்று நோயை தடுக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன.

புருக்கோலியில் சல்ஃபரோஃபேன் என்ற மூலக்கூறு உள்ளது. இது சக்திவாய்ந்த கதிர்வீச்சு மற்றும் புற்று நோயை உருவாக்கக் கூடிய ரசாயனங்களை வரவிடாமல் தடுக்கிறது என்று பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் உள்ள ஜூலி பௌமேன் என்ற பேராசிரியர் கூறியுள்ளார்.

இந்த புருக்கோலியை சாப்பிடும்போது, அவை உடலில் நச்சை வெளியேற்றச் செய்யும் ஜீனை தூண்டச் செய்கிறது. இதனால் செல்லைச் சுற்றிலும் பாதுகாப்பு வளையம் ஏற்பட்டு, சிதைவு ஏற்படாமல் காக்கிறது.

இதனால் இயல்பான செல்கள் புற்று நோய் செல்களாக மாறாமல் இருக்கிறது. புருக்கோலி தொடர்பான ஆய்வில் தலை மற்றும் தொண்டையில் புற்று நோய் உள்ளவர்களுக்கு அதிக சல்ஃபரோஃபேன் கொடுக்கப்பட்டு, சாதரணமாக இருப்பவர்களின் தலை மற்றும் தொண்டையின் செல்களோடு ஒப்பிட்டு பார்க்கப்பட்டுள்ளது.

அதேபோல் சோதனை எலிகளுக்கு புற்று நோயை செல்களை உட்செலுத்தி, சில எலிகளுக்கு கூடவே சல்ஃப்ரோஃபேன் மூலக்கூறுகளும் செலுத்தப்பட்டது.

ஆய்வின் இறுதியில், சல்ஃபரோஃபேன் கொடுக்கப்பட்ட எலிகளுக்கு புற்று நோயின் தாக்கம் மிகக் குறைவாகவே இருந்தது என கண்டறியப்பட்டது.

புருக்கோலியை புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களும் சாப்பிடும்போது, புற்று நோயின் தாக்கத்தை குறைத்து, வாழ் நாளை நீடிக்கச் செய்யும் என்று கூடுதல் தகவலையும் பௌமன் கூறினார்.