பெண் கலெக்டரை தரக்குறைவாக பேசிய எம்.எல்.ஏ.!

இடுக்கி மாவட்டம் தேவிகுளம் சப்-கலெக்டராக பணியாற்றி வருபவர் ரேணு ராஜ். 30 வயது நிறைந்த இவர் சட்டவிரோதமாக கட்டப்படும் ஆக்ரமிப்புகளை அகற்றுவது போன்ற பல்வேறு அதிரடி நடவடிக்கைகலீல் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் பழைய மூணாறு முதிரப்புழையாற்றின் பகுதியில் அடிக்கடி வெள்ளம் வரும் என்பதால் எந்தவிதமான கட்டடமும் கட்டக்கூடாது என்று உயர் நீதிமன்றம் 2010ம் ஆண்டு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் அந்த உத்தரவை மீறி அந்த பகுதியில் தேவிகுளம் மார்க்சிஸ்ட் கட்சி எம்எல்ஏவான ராஜேந்திரன், கட்டிடம் ஒன்றை கட்டி வருகிறார். இதுகுறித்து ஏராளமான புகார்கள் வந்த நிலையில், கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை நிறுத்தும்படி, சப் கலெக்டர் ரேணு ராஜ் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

ஆனாலும் கட்டிட பணிகள் தொடர்ந்து நடந்து வந்ததால் நேரடியாக சம்பவ இடம் சென்று கட்டிட பணிகளை நிறுத்தி வைக்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரேணுராஜ் உத்தரவிட்டார்.

இது குறித்து தகவலறிந்த தேவிகுளம் மார்க்சிஸ்ட் எம்எல்ஏ ராஜேந்திரன் அதிகாரிகளை தடுத்துள்ளார். மேலும் அரசு சார்பில் என்னிடம் விளக்கம் கேட்பது இது தான் முதல் முறை. கலெக்டர் ஆகவேண்டும் என்பதற்காக ஐஏஎஸ் படித்த அந்த பெண்ணிற்கு நாட்டு நடப்பு பற்றி என்ன தெரியும். ஐஏஎஸ் படித்தால் எல்லாம் தெரியும் என்று நினைக்கிறாள் ஆனால் விதிகள் பற்றி இன்னும் இவர் படிக்க வேண்டும்.

கட்டிட சட்டம் பஞ்சாயத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது. அதில் தலையிட அவளுக்கு எந்த உரிமையும் இல்லை. மூளை இல்லாதவர்களை இங்கு பணியமர்த்தி உள்ளனர் என்று கடுமையாக பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய ரேணு ராஜ் கூறுகையில், அனுமதியில்லாமல் கட்டிடம் கட்டுவது கோர்ட் அவமதிப்பு. எனவே கோர்ட் உத்தரவின்படியே நான் நடவடிக்கை எடுத்தேன். இது தொடர்பாக தலைமை செயலாளர் மற்றும் வருவாய்த்துறை செயலாளருக்கு அறிக்கை அனுப்பி விட்டேன். எனது கடமையை தொடர்ந்து செய்வேன். என்று கூறியுள்ளார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.