பிரித்தானியாவில் வரி உயர்வு! எதிர்ப்பு தெரிவித்த மருத்துவர்கள்…

பிரித்தானியாவில் வெளிநாட்டை சேர்ந்தவர்களிடம் வசூலிக்கப்படும் சுகாதார வரி இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.

பிரித்தானியாவில் வேலை, கல்வி போன்ற நுழைவு இசைவின் அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு மேலாக வசித்து வருபவர்களிடம் “குடியேற்ற சுகாதார வரி” வசூலிக்கப்படுகிறது.

கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஆண்டுதோறும் இந்த வரி வசூலிக்கப்பட்டும் வரும் நிலையில், கடந்தாண்டு டிசம்பர் முதல் இந்த தொகை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

இதற்கு இந்திய மருத்துவர்களும், சுகாதாரத் துறை பணியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய வம்சாவளி மருத்துவர்கள் சங்கம், உள்துறை செயலருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

அதில், பிரித்தானியாவில் ஏற்கனவே பணிபுரிந்து வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இதில் சுகாதார வரியும் இரட்டிப்பாகியுள்ளதால், வெளிநாடுகளில் இருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை அழைத்து வருவதில் சிரமம் இருக்கிறது.

அத்துடன் இந்நடவடிக்கையால் ஐரோப்பிய யூனியனை சாராத பிற நாடுகளிடம் இருந்து திறமை வாய்ந்த மருத்துவர்களை பிரித்தானியா இழந்து வருகிறது, எனவே வரிவிதிப்பை திரும்ப பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.