அழகான குடும்பத்தை விட்டு என்னை பிரிக்காதீங்க… கெஞ்சும் தமிழ் பெண்

இலங்கையை சேர்ந்த ஒரு குடும்பம் பிரித்தானியாவில் தஞ்சமடைந்த நிலையில் அந்த குடும்பத்தை சேர்ந்த வயதான பெண்ணை சொந்த நாட்டுக்கு செல்லும்படி உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம் (71). இவர் மனைவி சுஷிதா (63). தம்பதிக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் பாலசுப்ரமணியம் கடந்த 1994-ல் பிரித்தானியாவில் தஞ்சமடைந்தார்.

அவருக்கு அப்போது அகதி அந்தஸ்து கொடுக்கப்பட்டது.

இதன்பின்னர் அவரின் நான்கு பிள்ளைகளும் சில ஆண்டுகள் கழித்து பிரித்தானியா வந்த நிலையில் அவர்களுக்கும் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது.

இதையடுத்து பாலசுப்ரமணியத்தின் மனைவி சுஷிதா கடந்த 2014-ல் துணைவியாருக்கு வழங்கப்படும் விசா மூலம் பிரித்தானியாவுக்கு வந்தார்.

பின்னர் இருவரும் தங்களின் மகன் மோகனதாஸ் (35) உடன் வசித்து வந்தனர்.

தனது பிள்ளை மற்றும் பேர குழந்தைகளுக்கு உணவு தயார் செய்து கொடுப்பது, வீட்டு உதவிகளை செய்வது போன்ற விடயங்களை இருவரும் செய்து வந்தனர்.

இந்நிலையில் தனது விசாவை புதுப்பிக்க சுஷிதா 2016-ல் விண்ணப்பித்த நிலையில் அதை உள்துறை அமைச்சகம் நிராகரித்தது.

காரணம், உணவு தொழிற்சாலை மேலாளராக பணிபுரிந்த சுஷிதாவின் கணவர் பாலசுப்ரமணியம் பணிஓய்வு பெற்ற நிலையில் அவரால் போதிய வருமானத்தை ஈட்ட முடியாது என்பதால், மனைவியான சுஷிதா அவருடன் தங்கமுடியாது என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து சுஷிதா கூறுகையில், எனக்கு உடல்நலம் சரியில்லை, என் மொத்த குடும்பமும் இங்கு தான் உள்ளது, இலங்கையில் என்னை கவனித்து கொள்ள யாருமில்லை.

பிரித்தானியாவில் செளகர்யமாக இருக்கிறேன், என் பேர பிள்ளைகளுடன் நேரம் செலவழிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார்.

சுஷ்மிதாவின் மகன் மோகனதாஸ் கூறுகையில், என் அம்மாவை இலங்கைக்கு திருப்பி அனுப்பினால் அவர் தனியாக தான் வாழ வேண்டும், நான் இங்கே செட்டில் ஆகிவிட்டேன், என்னால் அடிக்கடி இலங்கைக்கு சென்று தாயை பார்த்து கொள்ள முடியாது.

என் பெற்றோர் என் வீட்டில் தங்கியுள்ளனர், அவர்கள் எந்தவொரு சலுகைகளையும் பெறவில்லை.

நான் அவர்களை கவனித்து கொள்வேன், வயதானவர்களை எப்படி அனுப்புவது? என கூறியுள்ளார்.

இவர்களின் குடும்ப வழக்கறிஞர் நாக கந்தையா கூறுகையில், இது ஒரு சோகமான வழக்கு, புலம்பெயரும் முறையின் கடுமையான உண்மைகளை இது காட்டுகிறது. குடும்பங்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம்.

இதுபோல கடுமையான சட்டங்கள் தொடர்ந்து பின்பற்றப்பட்டால் முதியவர்கள் அதிகளவில் தங்கள் குடும்பத்தை பிரிந்திருப்பதை தான் காண வேண்டும் என கூறியுள்ளார்.

உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், தனிப்பட்ட வழக்கு குறித்து நாங்கள் கருத்து தெரிவிப்பதில்லை.

சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கும் போது இது குறித்து கருத்து தெரிவிப்பது பொருத்தமானது அல்ல என கூறியுள்ளார்.