மீண்டும் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல்!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் இடம் பிடித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், வரும் 20ஆம் திகதி ஒருநாள் போட்டி தொடர் தொடங்க உள்ளது.

இந்த தொடரில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மூத்த வீரரான கிறிஸ் கெய்ல் நீண்ட இடைவெளிக்கு பிறகு இடம்பிடித்துள்ளார்.

மேலும், நிக்கோலஸ் பூரன் முதன் முறையாக ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பிடித்துள்ள நிலையில், சாமுவேல்ஸ் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை.

39 வயதாகும் கிறிஸ் கெய்ல் 284 ஒருநாள் போட்டிகளில் விளியாடியுள்ளார். இதில் 23 சதம், 49 அரைசதங்களுடன் 9727 ஓட்டங்கள் குவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் வங்கதேசத்திற்கு எதிராக விளையாடிய கெய்ல், அதன் பிறகு தற்போது தான் ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பிடித்துள்ளார்.