என் தன்னம்பிக்கையை வளர்த்தவர் ராகுல் டிராவிட்: தமிழக வீரர் விஜய் சங்கர்…

அவுஸ்திரேலிய தொடரில் ஹர்த்திக் பாண்டியாவுக்கு மாற்றாக களமிறங்க உள்ள தமிழக வீரர் விஜய் சங்கர், முன்னாள் இந்திய அணி வீரர் ராகுல் டிராவிட் குறித்து பெருமையாக பேசியுள்ளார்.

சர்ச்சைக்குரிய கருத்து கூறியதால் இடைநீக்கம் செய்யப்பட்ட ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக தமிழக ஆல்-ரவுண்டர் வீரர் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்பு இலங்கை அணிக்கு எதிராகவும், ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணியிலும் விஜய் சங்கர் விளையாடியிருந்தார். ஆனால், அவரது ஆட்டம் பெரிதாக சோபிக்கவில்லை. இதனால் தற்போது மீண்டும் இந்திய அணிக்கு விஜய் சங்கர் தெரிவு செய்யப்பட்டது குறித்து எதிர்மறை கருத்து நிலவுகிறது.

இந்நிலையில், அணியில் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டது குறித்து விஜய் சங்கர் கூறுகையில், ‘என்னுடைய finishing திறமை குறித்துதான் பெரும் சர்ச்சை நிலவி வந்தது. அதை நான் சரி செய்து, தன்னம்பிக்கையுடன் இப்போது இருக்கிறேன்.

மனரீதியாகவும் வலிமையுடன் இருக்கிறேன். முழுமையான நம்பிக்கையுடன் இருப்பதால், என்னால் கடைசி நேரத்தில் களமிறங்கி அணிக்கு சிறந்த finishing தர முடியும். நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான தொடரில் பல்வேறு அனுபவங்களை நான் கற்றுக்கொண்டேன்.

என்னுடைய திறமையை மேலும் பட்டை தீட்டிக்கொள்ள அங்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக இந்திய ஏ அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் என் மீதும், என் திறமை மீதும் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்.

என்னால் 5வது வரிசையில் களமிறங்கி சிறப்பாக பேட் செய்ய முடியும். finishing கொடுக்க முடியும் என்று நம்பினார். அதன்படியே 5ஆம் வரிசையில் களமிறங்கி சிறப்பாக செயல்பட்டேன்.

இரண்டு போட்டிகளில் சிறப்பான finishing கொடுத்து முடித்து வைத்தேன், மற்ற போட்டியில் ஆட்டமிழக்காமல் இருந்தேன். நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 300 ஓட்டங்களை சேஸிங் செய்யும்போது, நான் 87 ஓட்டங்கள் சேர்த்தது எனக்கு அதிகமான நம்பிக்கையை அளித்தது. மற்றொரு போட்டியில் 60 ஓட்டங்கள் சேர்த்தேன்.

நான் இப்போது வரை உலகக் கிண்ண அணியில் இடம் பெறுவேனோ என்பதை பற்றி நினைக்கவில்லை. அது குறித்து நினைக்க தொடங்கிவிட்டால், நம்மால் சுதந்திரமாக விளையாட முடியாது. நீண்ட காலத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்து அதைத் தக்கவைக்க தொடர்ந்து தீவிரமான பயிற்சிகளில் ஈடுபடுவேன்’ என தெரிவித்துள்ளார்.