கோர விபத்தில் சிக்கிய வாலிபர்!

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு கிராமத்தில் வசித்து வந்தவர் சுதாகர். இவர் காக்களூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில்பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் இரவு பணி முடிந்து சுதாகர் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது சென்னை நோக்கி வந்த கார் ஒன்று பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் சுதாகர் தூக்கி வீசப்பட்டார்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த உறவினர்கள் பார்த்த போது ஒரு கால் மட்டும் அங்கு துண்டாகி கிடந்துள்ளது. ஆனால் அவரது உடல் அங்கு மாயமாகியிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு யாரேனும் மருத்துவமனையில் சேர்த்திருக்கலாம் என்ற சந்தேகத்தில், திருவள்ளூரில் இருந்து சென்னை வரை உள்ள அனைத்து மருத்துவமனைகளில் தேடியுள்ளனர்.ஆனால் உடல் கிடைக்கவில்லை.

இதையடுத்து சுதாகரின் உடலை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டதை தொடர்ந்து ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கடப்பா அருகே சிமெண்ட் ஏற்றி சென்ற லாரி ஒன்றில் கால் துண்டான நிலையில் சுதாகரின் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.

பின்னர் விபத்தின் போது சுதாகரின் உடல் கால் துண்டான நிலையில் பின் பக்கம் வந்த லாரிக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளது. மேலும் இதனை கவனிக்காமல் லாரி ஓட்டுனர் தனது வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டிச்சென்றுள்ளார்.

பின்னர் கர்ணூலில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைக்குள் செல்வதற்கு முன்பாக லாரியை சோதனை செய்த போது லாரிக்குள் இளைஞர் சடலம் இருப்பது ஓட்டுனருக்கு தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து அவர் நேரில் பார்த்த விபத்து குறித்து அங்குள்ள காவல்துறையினரிடம் விவரித்துள்ளார்.

இதையடுத்து ஆந்திர காவல்துறையினர் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு விபத்தில் சிக்கிய சடலம் லாரியில் விழுந்த தகவலை விளக்கி உள்ளனர்.

இதையடுத்து சுதாகரின் உடலை திருவள்ளூர் கொண்டு வருவதற்காக தமிழக காவல் துறையினர் ஆந்திராவிற்கு விரைந்துள்ளனர்.இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.