மார்கழியில் சுபநிகழ்ச்சி செய்யக்கூடாது தெரியுமா?

தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் ஏதேனும் ஒரு சிறப்புகளுடன் விசேஷங்கள் நடைபெறுவது வழக்கம். அதில் மார்கழி மாதம் பக்தி மணம் நிறைந்த மாதமாகும்.

நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். தை மாதம் தொடங்கி ஆனி வரை அவர்களுக்குப் பகல் பொழுதாகவும், ஆடி மாதம் முதல் மார்கழி வரை இரவுப் பொழுதாகவும் அமையும். அப்படிப் பார்க்கும்போது அதிகாலையான பிரம்ம முகூர்த்தம் மார்கழியில் தான் வருகிறது. தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்தமாக இருப்பதால், மார்கழி மாதம் மனிதர்களுக்கு சிறந்ததாகிறது.

மார்கழி மாதத்தில் உலக நாட்டங்களை குறைத்து, இறைவனிடமும் அவர் திருவடி சார்ந்த செயல்பாடுகளில் மனம் ஒன்ற வேண்டும் என்பதற்காகவும், நமது சொந்தக் காரியங்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இந்த ஒரு மாதமாவது இறைவனின் மேல் நமது முழு சிந்தனையையும் செலுத்த வேண்டும் என்பதற்காகவும், மேலும் இந்த மாதத்தில் சுப நிகழ்ச்சிகளை வைத்தால், இறைவழிபாட்டில் இடையூறு ஏற்படும் என்பதற்காகவும் மார்கழியில் திருமணம் முதலான சுபநிகழ்ச்சிகளை நம் முன்னோர்கள் தவிர்த்தார்கள்.

இது தவிர மற்றொரு காரணமும் உள்ளது. மார்கழிக்கு அடுத்து வரும் தை மாதத்தை சிறப்புடன் கொண்டாட வசதியாக, கரும்பு, நெல், உளுந்து, வாழை, மஞ்சள் போன்றவற்றை வீட்டில் சேர்த்து வைப்பார்கள். இதற்கே அந்த மாதத்தின் பொழுது சரியாக இருக்கும் என்பதாலும் தான் மார்கழி மாதங்களில் சுப நிகழ்ச்சிகளை நடத்தாமல் இருந்தார்கள்.

அதன் வழியொட்டியே மார்கழியில் சுப நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதே நேரம் இறைவனிடம் மனம் ஒன்ற வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இந்த ஒரு மாதம் தினமும் விடியற்காலை ஆலயத்திற்கு சென்றால் வருடம் முழுதும் ஆலயம் சென்ற பலன் கிடைக்கும். வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.