இந்திய அணியின் நட்சத்திர வீரர் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இருபது ஓவர், டெஸ்ட் போட்டி தொடர்கள் முடிந்த நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடர் முடிந்ததும் நியூஸிலாந்தில் நடைபெறவுள்ள ஒரு நாள், இருபது ஓவர் போட்டி தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.

இந்த போட்டி தொடர்களுக்கான இந்திய அணியில் இடம்பெற்று இருந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஆஸி. மற்றும் நியூஸி ஒருநாள் தொடருக்கு முகமது சிராஜும், நியூஸி. இருப்பது ஓவர் போட்டி தொடருக்கு சித்தார்த் கவுலும் மாற்று வீரர்களாக ஆஸ்திரேலிய பறக்கிறார்கள்.

நேற்றுடன் முடிந்த டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு மிக முக்கிய பங்கு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உள்ளது. குறிப்பாக இந்தத் தொடரில் அதிக வெய்க்கெட் வீழ்த்தியவர்களில் முதலிடம் பிடித்த பும்ரா மொத்தம் 4 டெஸ்ட் போட்டிகளில் 157 ஓவர்கள் வீசி 21 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

பும்ரா இந்திய அணியின் தவிர்க்க முடியதா வீரராக உள்ளதால் அவருடைய வேலை பளுவை குறைப்பதற்காக அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் சிராஜ், தனது கடைசி ரஞ்சிக் கோப்பை போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். சித்தார்த் கவுல் நியூஸிலாந்து ஏ அணிக்கு எதிரான முதல் தரப்போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் ஜனவரி 12-ஆம் தேதி முதல் ஜனவரி 18 வரை நடக்கும். பின்னர் இந்திய அணி நியூஸிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணியுடன் 5 ஒருநாள் போட்டிகளிலும், மூன்று டி20 போட்டிகளிலும் விளையாட உள்ளது.