ரூ.30 லட்சம் மதிப்புள்ள நட்சத்திர ஆமைகளை கடத்த முயற்சி.! தப்பியோடிய மர்ம கும்பல்.!

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நட்சத்திர ஆமைகள் கடத்தப்படுவதாக ராயபுரம் உதவி கமி‌ஷனர் கண்ணனுக்கு தகவல் வந்தது. அவரது உத்தரவுப்படி காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் ஆய்வாளர் பரணிதரன் மற்றும் காவல்துறையினர் நேற்று இரவு அதிரடி கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அட்டை பெட்டிகளுடன் வந்த 2 வாலிபர்கள் காவல்துறையினரை கண்டவுடன் பெட்டிகளை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். அந்த அட்டை பெட்டிகளை திறந்து பார்த்தபோது 300 நட்சத்திர ஆமைகள் இருந்தன. மேலும் அதில் மலேசிய முகவரி இருந்தது.

நட்சத்திர ஆமைகளை கடல் வழியாக கடத்தி வந்த மர்ம கும்பல் அதனை சென்னையில் இருந்து விமானம் மூலம் மலேசியாவுக்கு கடத்த முயற்சிசெய்தது விசாரணையில் தெரிய வந்தது.

நட்சத்திர ஆமைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.30 லட்சம். பறிமுதல் செய்யப்பட்ட நட்சத்திர ஆமைகளை சுங்கத்துறை அதிகாரிகளிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். மேலும் தப்பி ஓடிய கும்பல் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.