சுருண்டு போன வெஸ்ட் இண்டீஸ்!!

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 3 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு மற்றும் தீபாவளியன்று நடக்கும் இப்போட்டி என்பதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தார்கள் என்றே சொல்லலாம்.

ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இந்தியா வென்றதால் டி20 தொடரையும் கைப்பற்றும் முனைப்புடன், கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி களம் இறங்கியது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங்கை தேர்தெடுத்தது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி ஆரம்பம் முதலே ரோஹித் சர்மா நான்கு பக்கமும் சிக்சர்கள் அடித்து 111 ரன்கள் மற்றும் தவான் 43 ரன்கள் அடித்திருந்தார். இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் சேர்த்தது.

பின்னர், 196 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆரம்பம் முதலே ஒவ்வொரு விக்கெட்டுகளாக இழந்தது. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால், இந்தியா 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் டி 20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக சதம் அடித்த ரோஹித் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மூன்றாவது டி20 போட்டி வரும் நவம்பர் 11ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதால், சென்னை ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் உள்ளார்கள்.