டாஸ் வென்ற இந்திய அணி அபார பந்துவீச்சு! வெஸ்ட் இண்டீஸ் வேஸ்ட் இண்டீஸ் ஆன பரிதாபம்!

மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த இரு அணிகள் இடையே நடைபெற்ற 2 டெஸ்ட் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கிலும், 5 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 3 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடர் இன்று கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இந்தியா வென்றதால் 20 ஓவர் தொடரையும் கைப்பற்றும் என ரசிகர்கள் ஏகப்பட்ட ஆர்வத்துடன் இருக்கிறார்கள். அணியின் கேப்டன் வீராட்கோலிக்கு 20 ஓவர் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டதால் அணித்தலைவர் பொறுப்பை ரோகித்சர்மா ஏற்றுள்ளார்.

டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. ஹர்டிக் பாண்டியாவின் சகோதரர் க்ருனால் பாண்டியா அறிமுக வீரராகவும், ஆல் ரவுண்டராகவும் களம் இறங்கினார். கலீல் அஹமட் மற்றொரு அறிமுக வீரராக களம் இறங்கினார். விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் செயல்படுகிறார்.

இந்திய அணியினர் தொடக்கம் முதலே பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்தினர். அதிரடியாக ஆட அவசரப்பட்டு வெஸ்ட் இண்டீஸ் அணியினர் வரிசையாக ஆட்டமிழந்து வெளியேறினார்கள். சுழற்பந்துவீச்சாளர்கள் குல்தீப், க்ருனால் பாண்டியா மிகவும் சிக்கனமாக பந்து வீசினார்கள். 8 ஓவர்களை வீசிய அவர்கள் 28 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்களை எடுத்துள்ளது. அதிகபட்சமாக அந்த அணியின் அறிமுக வீரர் ஆலென் 27 ரன்களை அடித்தார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டி குறைவான ரன்களில் முடிந்தது ரசிகர்களுக்கு கவலை அளித்திருக்கும்.