கெஞ்சும் இந்தியா!

கடும் நிபந்தனைகள் விதித்தாலும் நம்முடன் வர்த்தகம் செய்ய இந்தியா விரும்புகிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.

இறக்குமதி பொருட்களுக்கு வரி விதிக்கும் விவகாரத்தில் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளை அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. சீனப் பொருட்களுக்கு 3.40 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வரி விதிக்க டிரம்ப் ஒப்புதல் அளித்தார். இதற்கு பதிலடியாக சீனாவும், அமெரிக்க பொருட்களுக்கு அதே அளவு வரி விதித்தது.

ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் இரும்பு, அலுமினியத்துக்கும் வரியை ட்ரம்ப் உயர்த்தினார். அமெரிக்காவின் இருசக்கர வாகனங்களுக்கு வரியை உயர்த்தி ஐரோப்பியா பதிலடி கொடுத்தது. இதேபோல் இந்தியாவும் வரியை அதிகரித்துள்ளது. அமெரிக்காவிற்கு எதிராக உலக நாடுகள் அணி திரளும் சூழல் உருவாகி வர்த்தகப் போராக மாறியுள்ளது.

இந்நிலையில் தனது ஆதரவாளர்கள் கூட்டத்தில் டிரம்ப் பேசுகையில்,‘‘இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் அமெரிக்கா நல்லுறவை பேணி வருகிறது. வர்த்தக விஷயத்தில் அமெரிக்காவின் உரிமையை விட்டுக் கொடுப்பதில்லை. பல ஆண்டுகளாக வரி சலுகை அளித்து விட்டோம். இனிமேலும் இந்த தவறை செய்ய மாட்டோம். அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய இந்தியாவுக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளோம்.

எனினும் அவர்கள் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யவே விரும்புகிறார்கள். இந்தியாவில் இருந்து சமீபத்தில் கூட அவர்கள் அழைத்து வர்த்தகம் செய்ய விரும்புவதாக கூறினார்கள். ஆனால் நாங்கள் அவசரப்படவில்லை. அவர்கள் என்ன செய்கிறார்கள் என கவனித்து வருகிறோம். உடனடி முடிவு எடுக்கவில்லை.

முந்தைய ஆட்சி காலத்தில் பல நாடுகளிடம் அமெரிக்கா தனது உரிமையை விட்டுக் கொடுத்தது. அவர்கள் தங்கள் இஷ்டம் போல் வர்த்தகம் செய்தார்கள். இந்தியாவில் இருந்து மோடி வந்தாலும் சரி, ஜப்பானில் இருந்து ஷின்சோ அபே வந்தாலும் சரி அவர்களை வரவேற்கிறேன். அவர்களுடன் நட்பு பாராட்டுகிறேன். அது வேறு விஷயம். ஆனால் வர்த்தகத்தில் விட்டுக்கொடுக்க மாட்டேன்’’ என்றார்