டி.ஜி.பி.யால் கூட எங்களை ஒன்றும் செய்ய முடியாது!

திருவண்ணாமலையில் உள்ள அரசு வேளாண் கல்லூரி பேராசிரியைகள் பாலியல் புரோக்கர்களாக செயல்பட்டு மாணவிகளை மிரட்டிய ஆடியோ வைரலாகி வருகிறது.

திருவண்ணாமலை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்தார்.

இதுதொடர்பான ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து நிர்மலாதேவியை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

இந்த நிலையில், நிர்மலா தேவி விவகாரத்தை போல் திருவண்ணாமலையில் உள்ள அரசு வேளாண் கல்லூரி பேராசிரியைகளும் பாலியல் புரோக்கர்களாக செயல்பட்டு மாணவிகளை மிரட்டிய ஆடியோ வைரலாகி வருகிறது.

பேராசிரியைகள் 2 பேரும் கல்லூரி விடுதி வார்டன்களாகவும் உள்ளனர்.

அந்த ஆடியோவில் பேராசிரியைகள் மைதிலி, புனிதா ஆகிய 2 பேரும் பேசியதாவது:-

நீயா தான் உன் பிரச்சினையை கொண்டுபோன… உங்க அப்பாவை வரவழைத்து ஒரு கடிதத்தை எழுதி கொடுத்து விட்டு போகச்சொல். அப்படி கொடுத்தால் நீ இன்னும் 2 ஆண்டுகளில் படிப்பை முடித்துவிட்டு செல்லலாம்.

இல்லையென்றால் நீயே எனக்கு படிப்பு வேண்டாம் என்று கூறிவிட்டு சென்று விடு. இது உனக்கும், உன் அப்பாவுக்கும், டீனுக்குமான பிரச்சினை.

உன் அப்பாவை கல்லூரிக்கு வரச்சொல். எத்தனை தகவலை நாங்கள் வெளியே கொண்டு போகாமல் இருந்திருக்கிறோம் தெரியாதா உனக்கு?

மைண்ட்ட ஒரு இடத்துக்கு செட் பண்ணு…மரம் மாதிரி திமிரா நிற்காத. உனக்கு மரியாதை கொடுத்து பேசுனா கிறுக்கு மாதிரி இருக்க. உனக்கு என்ன வேணாலும் செய்றோம்.

நீ ஒத்துக்கல, உன் பெற்றோர் வந்து கேட்டால் நீ இங்கு வரவே இல்ல. எங்கயோ ஓடிப்போய்டனு சொல்லிடுவோம். உன் வாழ்க்கையை நாசமாக்கி விடுவோம். உனக்கு எதிராக குரல் கொடுக்க எங்களிடம் பல ஆதாரங்கள் உள்ளன.

போலீஸ் கேஸ் குடுப்பியா, எங்களை ஒன்னும் செய்ய முடியாது. ஒன்னு புரிஞ்சிக்க, பெரிய டி.ஜி.பி.யாலேயே எங்களை ஒன்னும் செய்ய முடியல. ஒன்னும் கிழிக்க முடியாது. எல்லாரும் கைய விரிச்சிடுவாங்க.

உன்ன மாதிரி எத்தனை பொண்ணுங்கள நாங்க பாத்திருக்கோம். ஒழுங்க நீ கேட்டா, படிச்சி முடிச்சிட்டு போலாம். இல்லைனா, நீ படிக்கவே முடியாது. டீன் சொன்ன மாதிரி கேட்டுநட. இல்லைனா, எத்தன வரு‌ஷம் ஆனாலும் உன்னால படிச்சி முடிக்க முடியாது.

இது ஒரு சின்ன வி‌ஷயம். சீக்கிரமா மறந்து போயிடும். கல்யாணம் பன்னிட்டு ஒரு குழந்தை பெத்துகிட்ட பிறகு நினைச்சு பாத்தா, இது ஒரு வி‌ஷயமாவே தெரியாது. சீக்கிரமா முடிவெடுத்து சொல். இவ்வாறு அவர்கள் மாணவியிடம் மிரட்டி பேசி உள்ளனர்.

இதில், குறிப்பிட்டு மாணவியை பற்றிய ஆதாரம் உள்ளதாக பேராசிரியைகள் தெரிவித்துள்ளனர். அந்த ஆதாரம் எது சம்பந்தமானது என்பது தெரியவில்லை. மேலும் பல மாணவிகள் பற்றியும், டீன் குறித்தும் குறிப்பிட்டு பேசி உள்ளனர்.

இந்த ஆடியோ பேச்சு உண்மையானதில்லை என்று புகாரில் சிக்கியுள்ள கல்லூரி பேராசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆடியோவில் செட்டப் செய்து பேச்சுகள் இணைக்கப்பட்டுள்ளது என்று கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.

இந்த ஆடியோ பேச்சின் உண்மை தன்மை குறித்தும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

மேலும், பேராசிரியர்கள் வார்டன்களாகவும் இருப்பதால், இரவு நேரத்தில் விடுதிக்கு உதவி பேராசிரியர் தங்க பாண்டியன் அடிக்கடி வந்து சென்றதாகவும் புகார் எழுந்துள்ளது.

அப்போது, மாணவி மீதான மோகத்தில் ஆசைக்கு இணைங்க பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

தங்க பாண்டியனின் பாலியல் தொல்லையை மாணவி செல்போனில் ரகசியமாக ஆடியோவாகவும், வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். அதனை கல்லூரி முதல்வரிடம் கொடுத்து தங்க பாண்டியன் மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, மாணவியை சமரசப்படுத்தும் முயற்சியில் பேராசிரியர்கள் மைதிலியும், புனிதாவும் ஈடுபட்டுள்ளனர். அப்போது, பேராசிரியரின் ஆசைக்கு இணங்கினால், உன் வாழ்க்கை செட்டில் ஆகிடும்.

அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவாய். இதே கல்லூரியில் உனக்கு பேராசிரியர் வேலை வாங்கி தருகிறோம் என்று கூறி மூளைச்சலவை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இவற்றையெல்லாம் பல முறை மாணவியை தனது செல்போனில் பதிவு செய்து ஆடியோ பேச்சுக்களை ஒருங்கிணைத்து புகாராக கொடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது.