அவுஸ்திரேலியாவில் டெஸ்டை வெல்வதே எமது இலக்கு -ஹதுருசிங்க

அவுஸ்திரேலியாவிற்கு இலங்கை அணி அடுத்த வருடம்  சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அந்த மண்ணில் முதல்தடவையாக டெஸ்ட்போட்டியொன்றை வெல்லவேண்டும் என்பதே தனது இலக்கு என இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சண்டிக ஹதுருசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் இலங்கை அணி அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அங்கு  டெஸ்டில் வெல்வதே ஹதுருசிங்கவின் இலக்காக காணப்படுகின்றது.

அவுஸ்திரேலியாவில் எதனையாவது சாதிப்பதற்கான வாய்ப்பு ஜனவரியில் கிடைக்கின்றது என தெரிவித்துள்ள அவர் இதற்கு தயாராவதே முக்கியம் என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஏழு மாதகாலப்பகுதியில்  நாங்கள் வித்தியாசமான சில விடயங்களை  சாதித்துள்ளோம், என தெரிவித்துள்ள ஹதுருசிங் நாங்கள் பார்படாசில் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றோம் அந்த மைதானத்தில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணி என்ற பெருமை எங்களிற்கு கிடைத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென்னாபிரிக்காவை தோற்கடித்ததையும் சுட்டிக்காட்டியுள்ள ஹதுருசிங்க எங்களிடம் திட்டங்கள் உள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வேளை ஸ்டீவ் ஸ்மித்தும் டேவிட் வோர்னரும் மீண்டும் அணியில் இடம்பெற்றிருப்பார்கள் என எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ள அவர் எனினும் அவர்கள் அணியில் இடம்பெறக்கூடாது என்பதே தனது எதிர்பார்ப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நியுசிலாந்தில் டெஸ்ட்போட்டிகள் முடிவடைந்ததும்  டெஸ்;ட் வீரர்களை அவுஸ்திரேலியாவிற்கு பயிற்சிக்காக அனுப்ப திட்டமிட்டுள்ளோம், எனகுறிப்பிட்டுள்ள ஹதுருசிங்க நாங்கள் சிறந்த முறையில் தயாரானால் முடிவுகள் சிறப்பாகயிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.