விஜயகலா மகேஸ்வரன் தொடர்பான விசாரணை இன்று முடிவடைந்துள்ளது

விடுதலைப் புலிகளின் கை மீண்டும் ஓங்க வேண்டும் என்று சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகள் முடிவடைந்தது.

விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திட்டமிட்ட குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைப் பிரிவு பொலிஸார், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளனர்.

விஜயகலா மகேஸ்வரன் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே பொலிஸார் இதனை கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக 59 வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 6 பேர், அரச அதிகாரிகள் 14 பேர் மற்றும் ஊடகவியலாளர்கள் 39 பேரின் வாக்குமூலங்களை பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளனர்.

விசாரணைகளை முடித்து அறிக்கைகளை சட்டமா அதிபருக்கு அனுப்பியுள்ளதாகவும் சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை வழக்கை ஒத்திவைக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டனர்.

கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரதான நீதவான் ரங்க திஸாநாயக்க, விசாரணைகளை ஒக்டோபர் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுள்ளார்.

அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை தாக்கல் செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.