“சிம்பு மேல எனக்குக் கோபம் இல்லை; நண்பரா அவர் மேல ஆதங்கம்தான் இருக்கு..!’’ – ராபர்ட்

`மாஸ்டர்’ ராபர்ட்; டான்ஸர்’ ராபர்ட்; `டான்ஸ் மாஸ்டர்’ ராபர்ட்; இப்போ `ஆக்டர்’ ராபர்ட் எனக் குழந்தை நட்சத்திரமாக `அழகன்’ படத்தில் அறிமுகமானதிலிருந்தே தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தைத் தேடி ஓடிக்கொண்டே இருக்கிறார் ராபர்ட். அவரைச் சந்தித்து `அழகன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு எப்படிக் கிடைத்தது என்பதிலிருந்தே பேட்டியை ஆரம்பித்தேன்.

ராபர்ட்

“எங்க அப்பா அந்தோணி, எங்க அண்ணன் பிரதீப் ரெண்டு பேருமே டான்ஸ் மாஸ்டர். `அழகன்’ படத்துக்கு ரகுராம் மாஸ்டர்தான் கோரியோ பண்ணினார். அவருக்கு எங்க அண்ணன் அசிஸ்டென்ட் கோரியோகிராபரா இருந்தார். `துடிக்கிறதே நெஞ்சம்’ பாட்டோட கடைசி நாள் ஷூட்டுக்கு நானும் வரேன்னு, வேடிக்கை பார்க்கத்தான் அண்ணன்கூட போனேன். போன இடத்துல என் கால் சும்மா இல்லாம ஏதேதோ ஸ்டெப்ஸ் போட்டுட்டு இருந்திருக்கேன். அதைப் பார்த்த ரகு மாஸ்டர், `யார் இந்தப் பையன். நல்லா ஆடுறான்’னு கேட்டதும், `என் தம்பி தான்’னு எங்க அண்ணா சொன்னதும், `இந்தப் பையனையும் இந்தப் பாட்டுக்கு யூஸ் பண்ணிக்கலாம்’னு கடைசி ஒரு நாள் மட்டும் என்னையும் ஆட வெச்சாங்க. நான் ஆடி முடிச்சதும் எங்க அப்பாவை வரச்சொல்லி, ‘பையனுக்கு நடிக்கிற ஆர்வம் இருக்கா; நடிக்க வைக்கலாமா’னு கேட்டாங்க. இப்படித்தான் அந்தப் படத்தில் நான் நடிக்க ஆரம்பிச்சேன். ஆனால், நான் நடிச்ச கேரக்டர்ல முதலில் வேற பையனை வெச்சு 50 சதவிகிதம் ஷூட்டிங் முடிச்சுட்டாங்க. பாலசந்தர் சாருக்கு என்னைப் பிடிச்சுப்போனதால, என்னை வெச்சு ரீ ஷூட் பண்ணுனாங்க.’’

`ஒண்டிக்கி ஒண்டி’ படத்தோட ஆடியோ லான்ச்ல நீங்க சிம்புவைப் பற்றிப் பேசியது வைரலாச்சே… என்ன பிரச்னை..?

“அதைப் பற்றி நான் சொல்றதுக்கு முன்னாடி, எனக்கும் சிம்புவுக்குமான நட்பைப் பற்றி சொல்லணும். 8 வயசுல இருந்து நானும் சிம்புவும் நண்பர்கள். சிம்புவோட முதல் படத்திலிருந்து `அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ வரைக்கும் நாங்க சேர்ந்து வொர்க் பண்ணியிருக்கோம். சினிமாவில் என்னோட காட் ஃபாதர் சிம்புதான். சிம்புவோட படங்களுக்கு கோரியோகிராப் பண்ணிதான் நான் வெளியில தெரிஞ்சேன். `குத்து’ படத்தோட `போட்டுத்தாக்கு…’ பாட்டு செம ஹிட்டானதுக்கு அப்பறம்தான் எங்க காம்போ பெரிசாப் பேசப்பட்டுச்சு. சிம்புவோட டான்ஸுங் ஸ்டைல்ல அடுத்த லெவல்னா அது ஃப்ளோரிங் மூவ்மென்ட்ஸ்தான். அந்த ஸ்டைலை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்ததே நான்தான். இந்த ஸ்டைலை யாரை வெச்சு பண்ணலாம்னு நான் யோசிக்கும் போது சிம்புதான் முதல் ஆளா என் மைண்டுக்கு வந்தார். `சிலம்பாட்டம்’ படத்திலிருந்து அந்த ஸ்டைலை அறிமுகப்படுத்தினோம். அதுக்கப்பறம் `விண்ணைத்தாண்டி வருவாயா’, `அச்சம் என்பது மடமையடா’னு சில படங்களைத் தவிர சிம்புவோட மற்ற எல்லாப் படங்களிலும் அவர்கூட வொர்க் பண்ணியிருக்கேன். இப்படி எங்க நட்பு ரொம்ப நல்லபடியா போயிட்டு இருந்தது; `ஒண்டிக்கி ஒண்டி’ படத்தோட ஆடியோ லான்ச் நடக்குற வரை.

நான் நடிகனாகணும்கிறது எங்க அப்பாவோட ஆசை. அதுக்காக சில படங்கள் நடிச்சிருக்கேன். மாறன் படத்துக்காகச் சிறந்த வில்லன் விருதுகூட வாங்கியிருக்கேன். ஆனால், எனக்கு டான்ஸ்தான் உயிர். அதனால நடிப்பைக் கொஞ்சம் கம்மி பண்ணிட்டு டான்ஸ்ல அதிக ஆர்வம் காட்ட ஆரம்பிச்சேன். ஆனால், தொடர்ந்து நடிக்கிறதுக்கு எனக்கு வாய்ப்புகள் வந்துட்டேதான் இருந்துச்சு. அப்போ அப்போ சில படங்கள் நடிச்சிட்டும் இருக்கேன். அப்படி நான் சமீபத்தில் நடிச்சிருக்கிற படம்தான், `ஒண்டிக்கி ஒண்டி’. அந்தப் படத்தோட ஆடியோ லான்ச் நடக்கும் போது அதில் என் நண்பன் சிம்பு இருக்கணும்னு ஆசைப்பட்டேன். அதுனால அவரை ஃபங்ஷனுக்குக் கூப்பிட்டேன்.

இந்த ஃபங்ஷனுக்கு சிம்புவைக் கூப்பிட்டிருக்கேன்னு தெரிஞ்சதும் சில பேர், `அவரை நம்பாதீங்க. கடைசி நேரத்துல வராமப் போயிடுவார்’னு சொன்னாங்க. `சிம்பு என் விஷயத்தில் அப்படிப் பண்ண மாட்டார்’னு சொன்னேன். ஆனால், நான் நினைக்காத மாதிரி; மத்தவங்க நினைச்ச மாதிரி சிம்பு ஃபங்ஷனுக்கு வரலை. அதுனாலதான் மேடையில் அப்படிப் பேசுனேன். என் பேச்சில் எங்குமே கோபம் தெரியாது. என் படத்தோட நிகழ்ச்சிக்கு என் நண்பன் வரலையேங்கிற ஆதங்கம்தான் தெரியும். அந்த ஆடியோ லான்ஞ்க்கு அப்புறமும் சிம்பு என்கிட்ட பேசவே இல்லை. அவருக்குத் தெரியும் எனக்கு போன் பண்ணுனா நான் திட்டிருவேன்னு.’’

ராபர்ட்

சிம்பு மேல சமீப காலமா நிறைய விமர்சனங்கள் வருது; அவரது நீண்ட கால நண்பரா அந்த விமர்சனங்களை எப்படிப் பார்க்குறீங்க..?

“சிம்பு ஷூட்டிங்கிற்கு சரியா வரதில்லைனு சொல்றாங்க. சிம்பு அப்போது இருந்தே அப்படித்தான்; கொஞ்சம் லேட்டாகத்தான் வருவார். ஆனால், கரெக்ட்டான டைம்ல ஷூட்டிங்கை முடிச்சுக் கொடுத்திருவார். ஒரு பாட்டுக்கு மூணு நாள்னா அதுக்குள்ள அதை முடிச்சிடுவார். எல்லாமே ஒரே டேக்தான். ஆனால், `டிரிப்பிள் ஏ’ படத்தில் நாங்க வொர்க் பண்ணும் போது சிம்பு ஷூட்டிங்கிற்கு ரொம்பவே லேட்டாகத்தான் வந்தார். அதெல்லாம் பார்க்கும் போது கஷ்டமா இருந்துச்சு. இப்போ மணிரத்னம் சார் படத்தோட ஷூட்டிங்கிற்கு சரியான டைமுக்கு வந்துட்டார்னு சொல்றாங்க. இந்தப் படம் மூலம் சிம்பு விட்ட இடத்தைப் பிடிச்சுட்டா எனக்கு ரொம்பவே சந்தோஷம். எனக்குத் தெரிஞ்சு சிம்புமறுபடியும் குத்து டான்ஸில இறங்கிட்டா, விட்ட இடத்தைப் பிடிச்சிடலாம்.’’