ஹிட்லரை தேடும் பௌத்த பிக்கு! ஜெர்மனியின் அறிவிப்பு

பௌத்த பிக்குவின் “ஹிட்லர்” தொடர்பான கருத்து வடிகட்டிய முட்டாள்தனமானது என ஜெர்மனி அறிவித்துள்ளது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, ஜெர்மனியின் முன்னாள் சர்வாதிகாரி அடொல்ப் ஹிட்லரை போன்று ஆட்சி செய்ய வேண்டுமென பௌத்த பிக்கு ஒருவர் வெளியிட்ட கருத்து பொறுப்புணர்ச்சியற்ற முட்டாள்தனமான கருத்து என இலங்கைக்கான ஜெர்மன் தூதுவர் ஜொயொரன் ரொஹாடே தெரிவித்துள்ளார்.

வெந்துருவே உபாலி தேரர் அண்மையில் வெளியிட்டிருந்த கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் கருத்துரைக்கும் போதே ஜெர்மன் தூதுவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

இலங்கைக்கு ஹிட்லர் ஒருவரின் ஆட்சி தேவையென உபாலி தேரர் வெளியிட்ட கருத்து தொடர்பில் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கொண்டுள்ள நிலைப்பாட்டை ஏற்று கொள்கின்றேன்.

உபாலி தேரரின் கருத்து மூலம் காவி சீருடை அணிவதானது பொறுப்புணர்ச்சியற்ற, முட்டாள்தனமான கருத்துக்களை வெளியிடுவதனை தடுக்காது என்பதனையே உணர்த்துகின்றது.

உலகின் அனைத்து பகுதிளிலும் அதிகளவு ஜனநாயகம் தேவைப்படுகின்றதே தவிர, குறைந்த ஜனநாயகம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.