மஹிந்தவின் கையை இறுக்கிப் பற்றிய தொண்டமான்!

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோல்வியடைய செய்வதும், வெற்றியடைய செய்வதும் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமே இருக்கின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நுவரெலியா சீத்தாஎலிய பிரதேசத்தில் இன்று உல்லாச விடுதி ஒன்றின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அங்கிருந்து வெளியேறுகையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்க முற்பட்ட வேளையில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் மஹிந்த ராஜபக்ஷவின் வலது கையை இறுக்கிப்பற்றினார்.

 

“அதன்போது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தரும் வகையில் அனைவரும் என் கையை பிடிக்கின்றார்கள்.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களும் ஆதரவாகவே செயல்படுகின்றார்கள். ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவரும், நாட்டின் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவிடமே கடைசி தீர்மானம் உள்ளது.

ஆனால் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக பூரண நம்பிக்கை இருக்கின்றது.” என்று மஹிந்த குறிப்பிட்டார்.

மஹிந்த பதிலளிக்கும் போது இடையில் குறிக்கிட்ட ஆறுமுகன் தொண்டமான்,

“மஹிந்த ராஜபக்ஷவை பார்த்து நம்பிக்கையில்லா பிரேரணைக்கு நீங்கள் கையொப்பம் இடவில்லை இது தான் எனக்கும் பிரச்சினையாக இருக்கின்றது” என்று சொன்னார்.

இதன்போது மஹிந்த தெரிவிக்கையில்,

“எப்போதும் விசுவாசம் என்பது இருந்தது இல்லையே. இப்போது மாத்திரம் கையொப்பமிட” என தெரிவித்தார்.

இதற்கு ஆறுமுகன் தொண்டமான் பதிலளிக்கையில்,

மனிதனுக்கு இரண்டு கண்கள் உண்டு. இந்த நிலையில் எனது ஒரு கண் மைத்திரிபால சிறிசேன என்றால் மற்றொரு கண் மஹிந்த ராஜபக்ஷ. இவ்வாறே நான் செயல்படுகின்றோம் என்றார்.