மனைவியை கத்தியால் குத்திய கணவன்? கோபத்தால் ஏற்பட்ட விபரீதம்

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனது மனைவியை கத்தியால் குத்தி காயப்படுத்திய கணவனை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த நபரை இம்மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

வெருகல் முகத்துவாரம், சூரநகர், மாவடிச்சேனை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரின் மனைவி அப்பகுதியிலுள்ள இளைஞர் ஒருவருடன் ஒரு வருட காலமாக தொடர்பு வைத்திருந்ததாகவும், சம்பவம் நடைபெற்ற தினம் கணவன் மீன் பிடிக்கச் சென்று இரவு வீட்டுக்கு சென்ற வேளை மனைவி காதலுடன் உறவு கொண்டுள்ளதை கண்டு ஆத்திரத்தில் மனைவிக்கு கத்தியால் குத்தி காயப்படுத்தி உள்ளதாகவும், பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபருக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபரை செவ்வாய்கிழமை இரவு கைது செய்துள்ளதோடு, மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.