கட்டாய திருமணம்: கதறிய இளம்பெண்!

இந்தியாவில் இளம் பெண்ணுக்கு 45 வயதான நபருடன் கட்டாய திருமணம் நடத்திவைக்கப்பட்ட நிலையில் பொலிசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.

ராஜஸ்தான் மாநிலத்தின் கைருவாலா கிராமத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

அங்குள்ள இளம் பெண்ணொருவர், இளைஞர் ஒருவரை காதலித்து வந்த நிலையில் அவரை திருமணம் செய்து கொள்ள நினைத்துள்ளார்.

ஆனால் இதற்கு பெண்ணின் குடும்பத்தார் சம்மதிக்காத நிலையில் 45 வயதான நபரை பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர்.

அதன்படி சில தினங்களுக்கு முன்னர் இளம் பெண்ணை சிலர் ஒரு இடத்துக்கு கட்டாயப்படுத்தி அழைத்து சென்றனர்.

அங்கு அவருக்கு திருமண ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் தன்னை விட்டு விடும் படி தரையில் விழுந்து புரண்டு அழுதுள்ளார்.

இதையடுத்து பெண்ணுக்கு அங்கிருந்தவர்கள் போதை ஊசியை செலுத்த, அவர் மயக்க நிலைக்கு சென்றார்.

பின்னர் 45 வயதான நபர், அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

மயக்கம் தெளிந்து பெண் எழுந்து மீண்டும் கூச்சல் போட்டார், இதையடுத்து அங்கு மக்கள் திரண்ட நிலையில் பெண்ணை ஒரு அறையில் வைத்து அங்கிருந்த கும்பல் அடைத்தது.

இது குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட சம்பவ இடத்துக்கு வந்து பெண்ணை மீட்ட பொலிசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.