ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான அண்ணனும் தம்பியும் தற்கொலை!

மட்டக்களப்பு கல்லடிப் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான அண்ணனும் தம்பியும் தற்கொலை செய்து அகால மரணமடைந்திருப்பதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு, கல்லடி வாவியிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை 26.01.2018 அதிகாலை சடலமாக மீட்கப்பட்ட இலங்கை மின்சார சபைப் பொறியியலாளரான கணேஷமூர்த்தி உமாரமணனின் இளைய சகோதரனான இலங்கை மின்சார சபை ஊழியரான கணேஷமூர்த்தி சாரோஜிதன்(வயது 21) ஞாயிற்றுக்கிழமை 28.01.2018 தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அண்ணன் இறந்த துயரம் தாளாது மனமுடைந்திருந்த நிலையிலேயே இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரே குடும்பத்தில் இவ்வாறு அடுத்தடுத்து இடம்பெற்ற இந்த அகால மரணங்கள் அந்தக் குடும்பத்தையும் கிராமத்தையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 24ஆம் திகதி காலை 8 மணியிலிருந்து காணாமல்போன இலங்கை மின்சார சபைப் பொறியியலாளரும் இரு குழந்தைகளின் தந்தையுமான கிருஷ்ணன் கோயில் வீதி, கல்லடியைச் சேர்ந்த, கணேஷமூர்த்தி உமாரமணன் (வயது 34) என்பவர் அடக்கம் செய்யப்பட்ட மறு தினம் அவரது தம்பி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உடற் கூறு பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இச்சம்பவம் பற்றி காத்தான்குடிப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.