இளைஞன் கத்தியால் குத்திப் படுகொலை!

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியிலுள்ள தேவாலய வளாகத்துக்குள், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திப் படுகொலைசெய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட தந்தைக்கும் மகனுக்கும் அடுத்தாண்டு 2018 ஜனவரி 11ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

பெரியகல்லாறு ஊர் வீதியிலுள்ள அருளானந்தர் தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது, இருவருக்கிடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கத்திக்குத்தாக மாறியதில் பெரியகல்லாறு முதலாம் குறிச்சி பிரதான வீதியைச் சேர்ந்த ஜேசுதாசன் தமேசன் (23 வயது) என்னும் இளைஞர் கொல்லப்பட்டிருந்தார்.

இளைஞன் கொலை – தந்தைக்கும் தனயனுக்கும்  விளக்கமறியல்!

இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவரும் சந்தேக நபரின் தந்தையும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த வேளையில் இன்று வியாழக்கிழமை (28.12.2017) களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டனர்.

பதில் நீதிவான் வினோபா இந்திரன் முன்னிலையில் சந்தேக நபர்களான கிராமசேவையாளர் மார்க்கண்டு பரிமளராசா (வயது 54) மற்றும் அவரது மகன் பரிமளராசா அபிசனன் (வயது 19) ஆகியோர் ஆஜர் செய்யப்பட்டபொழுது அவர்களை ஜனவரி 11 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வழக்கு அன்றைய தினத்திற்கு திகதி குறிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் விரிவான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இளைஞன் கொலை – தந்தைக்கும் தனயனுக்கும்  விளக்கமறியல்!