காதலில் தோல்வியடைந்த காதலர்களின் வலியைக் குறைக்கும் சந்தை!!

வியட்நாமில் உள்ள ‘ஓல்ட் ஃப்ளேம்ஸ்’ சந்தையில் காதலில் தோல்வியடைந்தவர்கள் காதலிக்கும் போது காதலனோ காதலியோ கொடுத்த காதல் பரிசுகளை விற்பனை செய்துவிடுகிறார்கள்.குறித்த சந்தையில் காதல் கடிதங்கள், வாழ்த்து அட்டைகள், கிடார், ஆடைகள், வாசனைத் திரவியம், மெழுகுவர்த்தி, பணப்பை, புத்தகங்கள் என்று ஏராளமான பொருட்கள் விற்பனைக்கு வருகின்றன.

இன்றைய இளைஞர்களும், இளம் பெண்களும் தோல்வியடைந்த காதலின் வலியைச் சுமந்துகொண்டு இருக்க விரும்புவதில்லை. வலியிலிருந்து விரைவில் விடுபடவே விரும்புகிறார்கள். அதனால் உண்மையை ஏற்றுக்கொண்டு, தங்களிடமிருக்கும் பரிசுப் பொருட்களைக் கொண்டுவந்து விற்றுவிடுகிறார்கள்.

இதன்மூலம் அவர்கள் அந்தத் துன்பத்திலிருந்து வெளிவந்துவிடுகிறார்கள். ‘என் காதல் உடைந்தபோது நான் மிகவும் வருத்தப்பட்டேன். என்னால் சாப்பிடவோ, எதுவும் குடிக்கவோ முடியவில்லை.

சில நாட்களுக்குப் பிறகு துன்பத்திலிருந்து வெளிவர முடிவெடுத்தேன். துணிகள், பணப்பைகள், பற்பசை என்று அனைத்தையும் விற்றுவிட்டேன். இப்போது பாரம் குறைந்துவிட்டது’ என்கிறார் 29 வயது கதலில் தோல்வியடைந்த இளைஞர் ஒருவர்.

கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சந்தை நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டிருக்கிறது. ‘போன தலைமுறை வரை பெற்றோர் பார்த்துவைக்கும் திருமணங்கள்தான் அதிகம்.

இன்றைய இளைஞர்கள் 30 வயது வரை சுதந்திரமாக இருந்துவிட்டு பிறகே காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். காதல் தோல்வியடைந்தாலும் அதிலிருந்து விரைவில் மீண்டுவிட நினைக்கிறார்கள். ‘ என்கிறார் இந்தச் சந்தையின் உரிமையாளர் டின் தாங்.