தெருக்களை சுத்தம் செய்யும் சச்சின் டெண்டுல்கர்!!

மும்பையில் தூய்மையே சேவை திட்டத்தின்கீழ் துடைப்பம் ஏந்தி தெருக்களை சுத்தம் செய்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

dena

மத்திய அரசின் ‘தூய்மையே சேவை’ திட்டத்தின்கீழ், மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கடந்த 15-ந் தேதி மும்பை கிராபர் மார்க்கெட் பகுதியில் துடைப்பம் ஏந்தி தெருக்களை சுத்தம் செய்தார். இதைத்தொடர்ந்து, முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்  மும்பை பாந்திரா பகுதியில் உள்ள தெருக்களில் நேற்று துடைப்பம் ஏந்தி சுத்தம் செய்தார்.

அவருடன் அவரது ரசிகர்களும் சேர்ந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து, சச்சின் டெண்டுல்கர்  நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பூமியை நமது தாய்க்கு நிகராக போற்றுகிறோம். ஆங்காங்கே காணப்படும் அழுக்கு மற்றும் குப்பை காரணமாக நமது தாய் பூமியின் அழகு சீரழிவதை காணும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. நாம் பொதுவாக வீடுகளில் குப்பையை போடமாட்டோம். ஆனால், வெளியில் குப்பைகளை கொட்டுகிறோம். இது எனக்கு பிடிக்காத விஷயம்.

ஆகையால், ஒவ்வொருவரும் ‘தூய்மையே சேவை’ பிரசாரத்தில் பங்கேற்று சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் மும்பையின் அழகு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தேசமும் சுகாதாரத்துடன் காணப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.