மெர்சல் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டம் !

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக பிரமாண்டமாக தயாரித்து வரும் படம் `மெர்சல்’.

விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இப்படத்தை அட்லி இயக்குகிறார். படத்தின் மீது அதீத எதிர்ப்பார்ப்பு நிலவி வரும் நிலையில், படத்தில் இருந்து ஆளப்போறான் தமிழன் என்ற ஒரு பாடல் மட்டும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 20-ஆம் தேதி நடக்க இருக்கிறது. படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த மெர்சல் படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற இருப்பதாகவும், அந்த நிகழ்ச்சி முழுவதையும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இசை வெளியீடு முழு நிகழ்ச்சியையும், படத்தின் தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றிய ஜி தமிழ் தொலைக்காட்சியிலும், யுடியூப்பிலும் நேரலையில் ஒளிப்பரப்ப படக்குழு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு ஒளிபரப்பப்பட்டால் தமிழ் திரையுலக வரலாற்றில் ஒரு புதிய முயற்சியாக இது இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

இப்படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடிக்கின்றனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா, சுனில், மிஷா கோஷல், யோகி பாபு, ஹரீஷ் பேரடி, மொட்டை ராஜேந்திரன், சீனு மோகன், சண்முக சிங்காரம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகின்றனர்.